கூடலூர்: CCTV-ஐ பொருட்படுத்தவே இல்லை; நள்ளிரவு டு அதிகாலை கொள்ளை முயற்சி - களமிறங்கிய காவல்துறை
கேரளா மற்றும் கர்நாடகாவை தமிழ்நாட்டுடன் இணைக்கும் கூடல் நகராக இருக்கிறது நீலகிரி மாவட்டத்தின் கூடலூர் பகுதி. மும்மாநில வாகன போக்குவரத்து நிறைந்த கூடலூர் நகரில் கடந்த சில தினங்களுக்கு முன்பு நள்ளிரவில் நடமாடிய கொள்ளையன் ஒருவன் தனியார் நிதி நிறுவனங்களை குறிவைத்து கொள்ளை முயற்சியில் ஈடுபட்டுள்ளான். கையுறைகள் அணிந்தும் தலை மற்றும் முகத்தை மறைத்துக் கொண்டு நடமாடிய கொள்ளையன், தனியார் நிதி நிறுவனம் ஒன்றின் கதவுகளை உடைத்து 2 ஆயிரம் ரூபாயை எடுத்துச் சென்றுள்ளான். நள்ளிரவு முதல் அதிகாலை வரை கொள்ளை முயற்சியில் ஈடுபட்டு வந்த அந்த மர்ம நபரை தேடும் பணியில் களமிறங்கியிருக்கிறது காவல்துறை.
இது குறித்து பேசும் கூடலூர் காவல்துறையினர், " நகரின் பல பகுதிகளிலும் சி.சி.டி.வி கேமிராக்கள் இருந்தும் அதை பொருட்படுத்தாமல் துணிந்து கொள்ளை முயற்சியில் ஈடுபட்டுள்ளான். முகத்தை மறைத்துக் கொண்டு பல பகுதிகளிலும் விடிய விடிய கொள்ளை முயற்சியில் ஈடுபட்டுள்ளான். துணிகர கொள்ளையன், தொடர் கொள்ளை முயற்சி தொடரலாம் என்ற சந்தேகத்தில் இரவு ரோந்து பணிகளை தீவிரப்படுத்திருக்கிறோம். வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. கொள்ளையனின் சி.சி.சி.டி.வி படங்களை வெளியிட்டுள்ளோம். அடையாளம் காண பொதுமக்களின் உதவியையும் நாடியிருக்கிறோம்" என்றனர்.