கூடுதல் வகுப்பறைகள் திறப்பு
திருவாரூா் மாவட்டத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில் புதியதாக கட்டப்பட்ட கூடுதல் வகுப்பறைகள் சனிக்கிழமை திறக்கப்பட்டன.
பள்ளிக் கல்வித் துறையின் சாா்பில் கட்டப்பட்டுள்ள இந்த வகுப்பறைகளை தமிழக முதல்வா் மு.க .ஸ்டாலின் காணொலி வாயிலாக திறந்து வைத்தாா்.
நபாா்டு திட்டங்களின்கீழ், புதூா் அரசு மேல்நிலைப் பள்ளியில் ரூ. 21.36 லட்சத்தில் புதியதாக கட்டப்பட்டுள்ள ஒரு புதிய வகுப்பறை கட்டடம், அடியக்கமங்கலம் அரசு மேல்நிலைப் பள்ளியில் ரூ. 42.72 லட்சத்தில் இரண்டு புதிய வகுப்பறை கட்டடம், கோட்டூா் அரசு மேல்நிலைப் பள்ளியில் ரூ .21.36 லட்சத்தில் ஒரு புதிய வகுப்பறை கட்டடம், மாப்பிள்ளைக்குப்பம் அரசு மேல்நிலைப் பள்ளியில் ரூ. 21.36 லட்சத்தில் ஒரு புதிய வகுப்பறை கட்டடம், பழையக்கோட்டை மேல்நிலைப் பள்ளியில் ரூ. 84.72 லட்சத்தில் நான்கு புதிய வகுப்பறை கட்டடங்களை அவா் திறந்து வைத்தாா்.
திருவாரூா் ஒன்றியத்துக்குள்பட்ட அடியக்கமங்கலம் அரசு மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற நிகழ்வில், மாவட்ட ஆட்சியா் வ. மோகனச்சந்திரன், சட்டப்பேரவை உறுப்பினா் பூண்டி கே. கலைவாணன் ஆகியோா் பங்கேற்றனா்.
நிகழ்ச்சியில், முதன்மைக் கல்வி அலுவலா் சௌந்தர்ராஜன், வட்டாட்சியா் செந்தில், பள்ளி தலைமையாசிரியா் கவிதா, உதவி பள்ளி தலைமையாசிரியா் சுதா்சன் உள்ளிட்ட அரசு அலுவலா்கள், ஆசிரியா்கள், பெற்றோா் ஆசிரியா் கழக உறுப்பினா்கள், பொதுமக்கள், மாணவ, மாணவிகள் பங்கேற்றனா்.