விராட் கோலிக்காக ஆர்சிபிக்கு ஆதரவளிக்கிறேன்: ஆஸ்திரேலிய வெளியுறவுத்துறை அமைச்சர்...
'கூட்டணி கணக்கு; முட்டுக்கட்டை போடும் அண்ணாமலை தரப்பு' - அனல் தகிக்கும் கமலாலயம்
நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் ஏற்பட்ட தோல்வியால் தமிழக பா.ஜ.க-வுக்குள் ஆயிரத்தெட்டு பஞ்சாயத்துக்கள் வெடித்துக் கிளம்பியது. இந்தச்சூழலில்தான் வரவுள்ள சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வியூகங்களை வகுக்கக் கூட்டப்பட்ட மையக்குழு கூட்டத்திலும் களேபரம் உண்டாகியிருக்கிறது. கூட்டத்தில் மூத்த தலைவர்கள் வழங்கிய ஆலோசனைகளுக்கு அண்ணாமலை தரப்பு எதிர்ப்பு தெரிவித்ததால் வாக்குவாதம் ஏற்பட்டது. இரு தரப்புக்கும் இடையிலான மோதலால் அனல் தகிக்கிறது கமலாலயம்!
அ.தி.மு.க தலைவர்கள் குறித்து தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை சர்ச்சையாகப் பேசியதால் தே.ஜ கூட்டணியிலிருந்து அ.தி.மு.க வெளியேறியது. பிறகு நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் ஒரு தொகுதியில் கூட பா.ஜ.க-வால் வெற்றிபெற முடியவில்லை. இதில் கடுப்பாகி "தோல்விக்கு அண்ணாமலையின் முடிவுதான் காரணம்" என வெளிப்படையாகப் போட்டுடைத்தார், தமிழிசை. பதிலுக்கு அண்ணாமலை ஆதரவு ஐ.டி-விங் தமிழிசை மீது தாக்குதல் தொடுத்தது. இருதரப்பையும் டெல்லி தலையிட்டு சமாதானம் செய்தது. இந்த சூழலில்தான் வரவுள்ள சட்டப்பேரவை தேர்தலுக்கான வியூகங்களை வகுக்கக் கடந்த 20.11.2024 அன்று கமலாலயத்தில் மையக்குழு கூட்டத்தைக் கூட்டினார்கள். இதில் மேலிடப் பொறுப்பாளர் அரவிந்த் மேனன், இணை பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி, ஒருங்கிணைப்புக்குழு தலைவர் ஹெச்.ராஜா உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.
'அ.தி.மு.க-வை அதிகம் விமர்சிக்க வேண்டாம்'
கூட்டத்தில் கலந்துகொண்ட தலைவர்கள் சிலர் நம்மிடம், "மையக்குழு கூட்டத்தில் வரும் சட்டப்பேரவை தேர்தலுக்குத் தயாராவது குறித்து விவாதிக்கப்பட்டது. அப்போது பேசிய தலைவர்கள் சிலர், "கடந்த நாடாளுமன்றத் தேர்தல் தோல்விக்கு அ.தி.மு.க-வுடன் கூட்டணி வைக்காததும் ஒரு காரணம். இதன் மூலமாக தி.மு.க வெற்றிபெறுவதற்கான வாய்ப்பை நாமே ஏற்படுத்திக்கொடுத்துவிட்டோம்" என்றனர். இதற்கு அரவிந்த் மேனன், "தற்போதைக்கு அ.தி.மு.க குறித்து அதிகம் விமர்சனம் செய்ய வேண்டாம். கருத்துக்களைத் தேசிய தலைமைக்குக் கொண்டு செல்கிறேன்" என்றார்.
அப்போது குறுக்கிட்ட அண்ணாமலையின் ஆதரவாளரும் மாநில துணைத் தலைவருமான கரு.நாகராஜன், "தேர்தலுக்கு இன்னும் நீண்ட காலம் இருக்கிறது. மாநில தலைவர் அண்ணாமலை வந்த பிறகு கூட்டணி குறித்துப் பேசிக்கொள்ளலாம்" என்றார். இதில் மற்ற தலைவர்கள் டென்ஷனாகி விட்டனர். குறிப்பாக ஹெச்.ராஜா, "மாநில தலைவர் வரும்போது வரட்டும். கூட்டணி குறித்து இப்போது யாரும் எந்த முடிவும் எடுக்கவில்லை" எனக் கொதித்தார். இருதரப்பையும் அரவிந்த் மேனன், சுதாகர் ரெட்டி சமாதானம் செய்தனர்.
சிறிது நேரம் அமைதியாக இருந்த கரு.நாகராஜன், "அண்ணாமலைக்கு எப்படி வரவேற்பு கொடுக்கலாம்?" என மீண்டும் பேச்சைத் திருப்பினார். இதில் கடுப்பாகி தமிழிசையும், வானதியும் பாதியிலேயே வெளியேறினர். இதையடுத்து விஜய் குறித்து பேசிய தலைவர்கள், "நம்மை பிளவுவதா கட்சி, ஒன்றிய அரசு என்றெல்லாம் விஜய் பேசுகிறார்" எனக் கோபப்பட்டனர். இதற்குப் பதிலளித்த அரவிந்த் மேனன், "மாநாட்டில் நேரடியாக பா.ஜ.க என விஜய் எங்கும் குறிப்பிடவில்லை. நம்மை நேரடியாகத் தாக்கி அவர் பேசட்டும். அதுவரை விஜய் குறித்தும் அதிகம் தாக்கி பேச வேண்டாம். தி.மு.க-வை விமர்சனம் செய்வதில்தான் கவனம் செலுத்த வேண்டும். மற்றதையெல்லாம் அமித்ஷா பார்த்துக்கொள்வார்" என்றார். கடந்த முறை அ.தி.மு.க-வுடன் கூட்டணி அமையாததற்கு அண்ணாமலைதான் காரணம். தற்போதும் முட்டுக்கட்டை போடுகிறார்கள்" என்றனர்.
'அண்ணாமலை தரப்புக்குத் துளியும் விருப்பமில்லை!'
இதுகுறித்து நம்மிடம் பேசிய கமலாலய சீனியர்கள், "தி.மு.க-வை வீழ்த்துவதுதான் பா.ஜ.க-வின் தற்போதைய ஒரே குறிக்கோள். இதற்காகக் கூட்டணிக்குள் எடப்பாடி, விஜய்யைக் கொண்டுவருவதற்கு டெல்லி விரும்புகிறது. தமிழக தலைவர்களும் இதற்குத் தயாராகவே இருக்கிறார்கள். அ.தி.மு.க கூட்டணிக்குச் சம்மதிக்காவிட்டால், விஜய்யை முதல்வர் வேட்பாளராக அறிவித்துக் களமிறங்கத் தயாராக இருக்கிறோம். எடப்பாடி வந்துவிட்டால் அவரையே முதல்வர் வேட்பாளராக அறிவிக்கவும் தலைவர்கள் பலருக்கு விருப்பம் இருக்கிறது. ஆனால் இதில் அண்ணாமலை தரப்புக்குத் துளியும் விருப்பம் இல்லை. இதேநிலை நீடித்தால் சட்டப்பேரவை தேர்தலிலும் தோல்விதான் ஏற்படும்" என்றனர் வேதனையாக.
நம்மிடம் பேசிய மூத்த பத்திரிகையாளர் குபேந்திரன், "கூட்டத்தில் கலந்துகொண்ட தலைவர்கள் தங்களது கருத்துக்களை வெளிப்படுத்தியிருக்கிறார்கள். பா.ஜ.க-வின் முக்கிய குறிக்கோள் தி.மு.க ஆட்சிக்கு வரக்கூடாது என்பதுதான். எனவேதான் விஜய், எடப்பாடியைக் கூட்டணிக்குள் கொண்டுவர விரும்புகிறார்கள். ஆனால் விஜய்யை, அண்ணாமலை ஏற்றுக்கொள்வது கடினம். மறுபக்கம் பா.ஜ.க கூட்டணிக்குள் விஜய் வருவதற்கும் வாய்ப்பு குறைவுதான். திராவிடம், தமிழ்த் தேசிய இரண்டும் எனது கண்கள் எனச் சொல்லிவிட்டு கூட்டணிக்கு வந்தால் த.வெ.க காணாமல் போய்விடும். எடப்பாடியும் 'பா.ஜ.க-வுடன் கூட்டணி இல்லை' எனத் தெளிவாகவே சொல்லிவிட்டார். அண்ணாமலை மாற்றப்பட்டால் தே.ஜ கூட்டணிக்குள் அ.தி.மு.க வரும். ஆனால் அதற்கான வாய்ப்புகள் குறைவுதான். அண்ணாமலை தலைவராகத் தொடர்ந்தால் அ.தி.மு.க-வையும் ஏற்றுக்கொள்ள மாட்டார். இதனால் உட்கட்சிக்குள் பிரச்சினைதான் வெடிக்கும். இருப்பினும் தேர்தல் நேரத்தில் மாற்றங்கள் ஏற்படுவதற்கும் வாய்ப்புகள் உள்ளன" என்றார்.
இறுதியாக பா.ஜ.க துணைத் தலைவர் நாராயணன் திருப்பதியிடம் விளக்கம் கேட்டோம், "கூட்டத்தில் கட்சியைப் பலப்படுத்துவது குறித்துத்தான் விவாதம் நடந்து. தேர்தலின்போது யாருடன் கூட்டணி என்பதைத் தேசிய தலைமைதான் முடிவு செய்யும். எங்களுக்குள் எந்த பிரச்னையும் இல்லை. வேண்டுமென்றே சிலர் தவறான தகவல்களைப் பரப்பி வருகிறார்கள்" என்றார்.
நீங்கள் விரும்பி படித்த தொடர்கள், இப்போது ஆடியோ வடிவில்... புத்தம் புதிய விகடன் ப்ளே... உங்கள் அன்றாட பணிகளை கவனித்துக் கொண்டே ரசித்து கேட்க, உடனே இன்ஸ்டால் செய்யுங்கள்...