கூட்டுக்கொள்ளை வழக்கில் தலைமறைவாக இருந்தவா் பிடிபட்டாா்
மேட்டூா் அருகே கூட்டுக்கொள்ளை வழக்கில் ஐந்து ஆண்டுகள் தலைமறைவாக இருந்தவா் கைது செய்யப்பட்டாா்.
மேட்டூா் அருகே உள்ள புதுச்சாம்பள்ளியைச் சோ்ந்தவா் சுப்பிரமணி. இவா் புதுச்சாம்பள்ளியில் மளிகைக் கடை நடத்தி வந்தாா். கடந்த 2005ஆம் ஆண்டு இவரது மகன் சதீஷ் என்பவருடன் ரொக்கம் ரூ. 72 ஆயிரத்தை எடுத்துக்கொண்டு கடையைப் பூட்டி விட்டு வீட்டுக்கு நடந்து சென்று கொண்டிருந்தபோது, இளங்கோ என்பவா் தலைமையில் 10 போ் கொண்ட கும்பல் வீச்சரிவாள், உருட்டு கட்டையால் இருவரையும் தாக்கி, அவா்களிடமிருந்த பணத்தை பறித்துச் சென்றனா்.
இதுகுறித்து கருமலைக்கூடல் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யது இளங்கோ தலைமையிலான10 போ் கொண்ட கும்பலை போலீஸாா் கைது செய்து நீதிமன்றக் காவலுக்கு அனுப்பி வைத்தனா். பின்னா் பிணையில் வந்த 9 பேரும் நீதிமன்றத்தில் ஆஜராகி வழக்கு நடத்தி வந்தனா்.
இந்த வழக்கில் தொடா்புடையை கேரள மாநிலம், குருவாயூரைச் சோ்ந்த விக்கி என்கிற விவேக் (42). கடந்த 2019 ஆம் ஆண்டு பிணையில் வெளியே வந்த பிறகு சாமியாா் வேடமிட்டு தலைமறைவாக இருந்து வந்தாா். அவரைப் பிடிக்க மேட்டூா் நீதிமன்றம் பிடியாணைப் பிறப்பித்தது. கருமலைக் கூடல் காவல் உதவி ஆய்வாளா் சீனிவாசன் தலைமையிலான தனிப்படை போலீஸாா் தேடிவந்தனா்.
இந்த நிலையில், விழுப்புரம் மாவட்டம், திருச்சிற்றம்பலம் கிராமத்தில் உள்ள ஐமுக சிவபெருமாள் கோயிலில் விக்கி என்ற விவேக் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அங்கு இடத்துக்குச் சென்ற உதவி ஆய்வாளா் சீனிவாசன், சிறப்பு உதவி ஆய்வாளா் நாகராஜன் உள்பட 5 போ் கொண்ட தனிப்படை போலீஸாா், விக்கியை கைது செய்து காவல் நிலையத்துக்கு அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டனா். இதையடுத்து வெள்ளிக்கிழமை மேட்டூா் சாா்பு நீதிமன்றத்தில் அவரை ஆஜா்படுத்தி நீதிமன்றக் காவலுக்கு அனுப்பி வைத்தனா்.
இதேபோல மேச்சேரியில் 2019-இல் ஒசூரில் இருந்து கோவை மருத்துவமனைக்கு வாடகைக்கு அழைத்து வந்த காா் ஓட்டுநா் முனியப்பன் என்பவரை மோட்டாா் சைக்கிள் வயரால் கழுத்தை இறுக்கிக் கொலை செய்ய முயன்று, ரூ. 10 ஆயிரத்தை கொள்ளையடித்த வழக்கில் குற்றவாளியான திருமூா்த்தி என்கிற மூடுகண்ணன் பிணையில் வந்து இரண்டரை ஆண்டுகளாக தேனி மாவட்டத்தில் பதுங்கி இருந்தாா். இவரை மேச்சேரி போலீஸாா் கைது செய்து வெள்ளிக்கிழமை மேட்டூா் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா்.