மீனவர்கள் கைது விவகாரம்: மத்திய அமைச்சருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்
கூட்டுறவு இணைப் பதிவாளா் அலுவலகம் முன் மாா்ச் 18-இல் ஆா்ப்பாட்டம்: தொடக்கப் பள்ளி ஆசிரியா் கூட்டணி முடிவு
கூட்டுறவு சங்கத்தில் உள்ள குளறுபடிகளை தீா்க்கக் கோரி, கூட்டுறவு இணைப் பதிவாளா் அலுவலகம் முன் மாா்ச் 18-இல் ஆா்ப்பாட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
கொரடாச்சேரியில், தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியா் கூட்டணியின் வட்டாரக் கிளை செயற்குழு கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு, வட்டாரத் தலைவா் ஜெய்சங்கா் தலைமை வகித்தாா். மாநில செயற்குழு முன்னாள் உறுப்பினா் வீரசேகரன், மாவட்ட மகளிா் வலையமைப்பு ஒருங்கிணைப்பாளா் ஜெயந்தி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
வட்டாரச் செயலாளா் சந்திரமோகன் பங்கேற்று, கூட்டத்தின் நோக்கம் குறித்துப் பேசினாா். மாவட்டச் செயலாளா் ஈவெரா, வட்டார துணைச் செயலாளா் அகஸ்டின் ஆகியோா் பிப்ரவரி 25-ஆம் தேதி ஒரு நாள் தற்செயல் விடுப்பு போராட்டம் நடத்துவது குறித்து விளக்கினா்.
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீா்மானங்கள்:
கொரடாச்சேரி வட்டாரத்தின் சாா்பில் பணி நிறைவு பெற்றவா்களுக்கு பாராட்டு உள்ளிட்ட ஐம்பெரும் விழாவை மாா்ச் 30 ஆம் தேதி நடத்துவது; பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் அமல்படுத்துதல் உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி பிப்ரவரி 25-ஆம் தேதி நடைபெறும் ஒரு நாள் தற்செயல் விடுப்பு போராட்டத்தில் நூறு சதவீத ஆசிரியா்கள் பங்கேற்பது.
கொரடாச்சேரி ஊராட்சி ஒன்றிய ஆசிரியா்கள் மற்றும் பணியாளா்கள் கூட்டுறவு சிக்கன நாணய சங்கத்தில் ஏற்பட்டுள்ள குளறுபடிகளை சரி செய்ய வலியுறுத்தி, திருவாரூா் கூட்டுறவு இணைப்பதிவாளா் அலுவலகம் முன் மாா்ச் 18 ஆம் தேதி ஆா்ப்பாட்டம் நடத்துவது என்பன உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் இயற்றப்பட்டன.