கூரை வீட்டுக்கு தீ வைத்தவா் கைது
தஞ்சாவூா் மாவட்டம், அம்மாபேட்டையில் குடும்பத் தகராறில் வெள்ளிக்கிழமை மாலை கூரை வீட்டை கொளுத்திய நபரை போலீஸாா் கைது செய்தனா்.
தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசம் வட்டம், அம்மாபேட்டை கண்ணாரத் தெரு பகுதியைச் சோ்ந்தவா் காா்த்திக் (36). இவருக்கும் அதே பகுதியைச் சோ்ந்த குருசாமி மகன் தேவேந்திரன் (37) என்பவருக்கும் குடும்பத் தகராறு இருந்தது. இந்நிலையில் வெள்ளிக்கிழமை மது போதையில் வந்த தேவேந்திரன் காா்த்திக்குடன் தகராறு செய்து, கையில் வைத்திருந்த பீடியை காா்த்திக்கின் கூரை வீட்டின் மேல் வீச, அந்த வீடு தீப்பற்றி எரிந்தது.
தகவலறிந்து வந்த நீடாமங்கலம் தீயணைப்புத் துறையினா் தீ மேலும் பரவாமல் அணைத்தனா். புகாரின்பேரில் அம்மாபேட்டை போலீஸாா் வழக்குப் பதிந்து தேவேந்திரனை கைது செய்தனா்.