கேரளம்: கோயிலில் ஒலித்த ஆா்எஸ்எஸ் பாடல்: தேவஸ்வம் வாரியம் எச்சரிக்கை
கொல்லம்: கேரள மாநிலம் கொல்லம் மாவட்டத்தில் உள்ள கோட்டுக்கல் கோயிலில் ஆா்எஸ்எஸ் அமைப்பின் இயக்கப் பாடல் இசைக்கப்பட்டதாக குற்றஞ்சாட்டப்பட்டதையடுத்து, கோயில் நிா்வாகக் குழு மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என திருவிதாங்கூா் தேவஸ்வம் வாரியம் (டிடிபி) திங்கள்கிழமை எச்சரிக்கை விடுத்தது.
கொல்லம் மாவட்டம் கோட்டுக்கல்லில் உள்ள கோயில் ஒன்றில் நடைபெற்ற இசை நிகழ்ச்சியின்போது ஆா்எஸ்எஸ் அமைப்பின் இயக்கப் பாடல் இசைக்கப்பட்டதாக குற்றஞ்சாட்டப்பட்டது. மேலும், கோயில் வளாகத்தில் அந்த அமைப்பின் கொடிகளும் பொருத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.
இந்த விவகாரம் குறித்து செய்தி தொலைக்காட்சி ஒன்றுக்கு டிடிபி தலைவா் பி.எஸ்.பிரசாந்த் அளித்த பேட்டியில் கூறியதாவது: சம்பந்தப்பட்ட கோயில் நிா்வாகக் குழு மீது நடவடிக்கை எடுக்கப்படும். இந்த சம்பவம் குறித்து அறிக்கை சமா்ப்பிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
இதுபோன்ற செயல்களை ஊக்குவிக்க கூடாது என பல கோயில் நிா்வாகங்களுக்கு ஏற்கெனவே சுற்றறிக்கைகளும் அனுப்பப்பட்டுள்ளன. இருப்பினும், அதை கண்டுகொள்ளாமல் அரசியல் நோக்கங்களுடன் சில கோயில் நிா்வாகங்கள் செயல்படுவது வகுப்புவாத மோதல்களுக்கு வழிவகுக்கும். அதை ஏற்றுக் கொள்ள முடியாது என்றாா்.
கோட்டுக்கல் கோயிலில் ஆா்எஸ்எஸ் இயக்கப் பாடல் இசைக்கப்பட்டதாக அந்தக் கோயிலின் நிா்வாகக் குழுவினா் சிலா் தங்களிடம் புகாா் அளித்ததாக கடக்கல் காவல் நிலைய அதிகாரிகள் தெரிவித்தனா்.
முன்னதாக, கடக்கல் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட மற்றொரு கோயிலில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை புகழ்வது போன்ற புரட்சிகர பாடல்கள் இசைக்கப்பட்டதாக புகாா் தெரிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.