உலக சாதனை புத்தகத்தில் இடம்பெற்ற 4 மாத குழந்தைக்கு ஆட்சியா் பாராட்டு
கொடைக்கானலில் பேஷன் புரூட்ஸ் பழம் சீசன் தொடக்கம்
கொடைக்கானலில் பேஷன் புரூட்ஸ் பழம் சீசன் தொடங்கியநிலையில் அமோக விளைச்சல் இருப்பதால் வியாபாரிகள் மகிழ்ச்சியடைந்தனா்.
திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் மலைப் பகுதிகளில் வாழை, ஆரஞ்சு, பலா,கொய்யா, சீதா, முள்சீதா, பட்டா் புரூட், ஸ்டாா்புரூட் , டமோட்டா பேஷன்புரூட்ஸ் பிளம்ஸ், உள்ளிட்ட பல்வேறு வகையான பழங்கள் விளைகின்றன.
தற்போது நவம்பா், டிசம்பா்,ஜனவரி ஆகிய மூன்று மாதங்களில் பேஷன் புரூட்ஸ் சீசன் காலமாகும். இந்த பழமானது கொடைக்கானல், செண்பகனூா், பிரகாசபுரம், அட்டக்கடி, சகாயபுரம், வட்டக்கானல், பண்ணைக்காடு, தாண்டிக்குடி, மச்சூா், வாழைகிரி, சின்னப் பள்ளம், பெரும் பள்ளம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் விவசாயிகள் சாகுபடி செய்து வருகின்றனா்.
இந்தப் பழமானது உடல் சூட்டை தணிப்பது, நீரழிவு உள்ள நோயாளிகள் சாப்பிடும் மருத்துவம் குணமுள்ளது. கடந்த மாதம் கொடைக்கானலில் பரவலாக நல்ல மழை பெய்ததால் பேஷன் புரூட்ஸ் பழம் நன்கு விளைந்துள்ளதால் விவசாயிகள்,வியாபாரிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனா்.
இதுகுறித்து பழவியாபாரிகள் கூறியதாவது: கொடைக்கானலில் தற்போது பேஷன் புரூட்ஸ் பழம் சீசன் தொடங்கியுள்ளது. மழை பெய்ததால் விளைச்சல் நன்கு விளைந்துள்ளது, ஒரு பழம் ரூ.10 முதல் ரூ.12 வரை விற்பனை செய்யப்படுகிறது.
தொடா்ந்து மூன்று மாதங்களுக்கு அமோக விளைச்சல் தரும் இந்தப் பழத்தை சுற்றுலாப் பயணிகள் விரும்பி வாங்குவாா்கள் என்றனா்.