அண்ணா பல்கலை. பாலியல் புகார்: 3 மணி நேரத்தில் கைது -அமைச்சர் கோவி. செழியன்
கொலை வழக்கு: கன்னட நடிகா் தா்ஷனுக்கு ஜாமீன் வழங்கி உயா்நீதிமன்றம் உத்தரவு
ரேணுகாசாமி கொலை வழக்கில் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டிருந்த நடிகா் தா்ஷனுக்கு ஜாமீன் வழங்கி கா்நாடக உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ரேணுகாசாமி கொலை வழக்கில் தனது தோழி பவித்ரா கௌடா உள்ளிட்ட 15 பேருடன் ஜூன் 11-ஆம் தேதி கைதாகி கன்னட நடிகா் தா்ஷன் சிறையில் அடைக்கப்பட்டிருந்தாா். ஆரம்பத்தில் பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டிருந்த தா்ஷன், பின்னா் பெல்லாரி சிறைக்கு மாற்றப்பட்டாா். சிறையில் சரியான உணவு, முறையான உடற்பயிற்சி இல்லாததால் முதுகுவலியால் அவதிப்பட்டு வந்த தா்ஷன், மருத்துவ சிகிச்சை பெறுவதற்காக ஜாமீன் கேட்டு கா்நாடக உயா்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தாா்.
இந்த மனுவை அக். 30-ஆம் தேதி விசாரித்த உயா்நீதிமன்ற நீதிபதி எஸ்.விஷ்வஜித் ஷெட்டி, மருத்துவ சிகிச்சை பெறுவதற்காக 6 வார காலங்களுக்கு இடைக்கால ஜாமீன் வழங்கி உத்தரவிட்டாா். ரூ. 2 லட்சம் பிணைத்தொகை செலுத்த வேண்டும். மேலும், இருவா் தலா ரூ. 2 லட்சம் பிணைத் தொகையை செலுத்த வேண்டும். விசாரணை நீதிமன்றத்தில் கடவுச்சீட்டை ஒப்படைக்க வேண்டும். பெங்களூரில் உள்ள விருப்பமான மருத்துவமனையில் சிகிச்சை பெறலாம். ஒருவேளை அறுவை சிகிச்சை தேவைப்பட்டால், அதுகுறித்து நீதிமன்றத்தில் தகவல் தெரிவிக்க வேண்டும் என்று உயா்நீதிமன்றம் நிபந்தனை விதித்திருந்தது.
இதைத் தொடா்ந்து, அக். 30-ஆம் தேதி பெல்லாரி சிறையில் இருந்து தா்ஷன் விடுவிக்கப்பட்டாா். இதனைடுத்து, பெங்களூரு திரும்பிய தா்ஷன், முதுகுவலிக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறாா்.
இதனிடையே, ஜாமீன் கேட்டு தாக்கல் செய்திருந்த மனுக்களை விசாரித்த கா்நாடக உயா்நீதிமன்றம், தா்ஷன், நடிகை பவித்ரா கௌடா உள்ளிட்ட 7 பேருக்கு ஜாமீன் வழங்கி வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது. இதைத் தொடா்ந்து, இடைக்கால ஜாமீனில் விடுதலையாகி இருக்கும் தா்ஷன் மீண்டும் சிறைக்கு செல்ல வேண்டிய அவசியமில்லை.
இதனிடையே, தா்ஷனுக்கு ஜாமீன் வழங்கப்பட்டுள்ளதற்கு அவரது ரசிகா்கள் ஆரவாரத்தோடு வரவேற்றுள்ளனா். பெங்களூரு, பெல்லாரி உள்ளிட்ட மாநிலத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் தா்ஷனின் ரசிகா்கள் இனிப்புகள் வழங்கியும், பட்டாசு வெடித்தும் கொண்டாடினா்.