கிரிக்கெட் பந்து பட்டு 17 வயது ஆஸ்திரேலிய வீரர் பென் ஆஸ்டின் மறைவு; சோகத்தில் க...
கோபப்படுத்தினால் தீ வைத்துவிடுவேன்; 17 குழந்தைகளைக் கடத்திய மும்பை நபர் கைது
மும்பை பவாய் பகுதியைச் சேர்ந்தவர் ரோஹித் ஆர்யா. நேற்று திடீரென ரோஹித் 17 குழந்தைகளை பிணைக் கைதிகளாகப் பிடித்தார். அங்குள்ள ஆர்.ஏ.ஸ்டூடியோவில் குழந்தைகள் திரைப்பட நடிப்பு பயிற்சி வகுப்பில் ஈடுபட்டிருந்தனர். அக்குழந்தைகளை ரோஹித் பிணைக் கைதிகளாக பிடித்துள்ளார். இது குறித்த செய்தி பரவியவுடன் பரபரப்பு ஏற்பட்டது. குழந்தைகளைக் கடத்திய நபர் இது குறித்து வீடியோ ஒன்றை வெளியிட்டார். அவர் வெளியிட்ட வீடியோவில்,'' நான் ரோஹித் ஆர்யா. தற்கொலை செய்து கொள்வதற்கு பதிலாக, நான் ஒரு திட்டத்தை வகுத்து, சில குழந்தைகளை இங்கே கைதிகளாகப் பிடித்து வைத்திருக்கிறேன்.
இந்தக் குழந்தைகளை நான் கைதிகளாகப் பிடித்திருக்கிறேன். நான் வாழ்ந்தால், நான் செய்ய நினைத்ததை செய்வேன்; நான் இறந்தால், வேறு யாராவது செய்வார்கள், ஆனால் அது நிச்சயமாக நடக்கும். நீங்கள் எனக்கு எதிராக சிறிய தவறான முடிவு எடுத்தாலும் நான் கோபமாகிவிடுவேன்.

நாங்கள் இருக்கும் இடத்திற்கு தீவைத்துவிடுவேன். எனக்கு அதிக கோரிக்கைகள் இல்லை. எனது கோரிக்கைகள் மிகவும் எளிமையானது, தார்மீக கோரிக்கைகள், நெறிமுறை கோரிக்கைகள் மற்றும் என்னிடம் சில கேள்விகளும் உள்ளன.
நான் சிலரிடம் பேச விரும்புகிறேன், அவர்களிடம் கேள்விகளும் கேட்க விரும்புகிறேன், அவர்களின் பதில்களுக்கு என்னிடம் எதிர் கேள்விகள் இருந்தால், நான் அவர்களிடம் திரும்பக் கேட்க விரும்புகிறேன். ஆனால் எனக்கு இதற்கு பதில்கள் வேண்டும். எனக்கு வேறு எதுவும் வேண்டாம். நான் தீவிரவாதி இல்லை, நான் அதிக பணமும் கேட்கவில்லை. நிச்சயமாக முறையற்ற எதையும் நான் விரும்பவில்லை," என்று ஆர்யா வீடியோவில் கூறினார்.
அந்த வீடியோ வைரலானவுடன் போலீஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். குழந்தைகளின் பெற்றோர் அக்கட்டடத்தை சூழ்ந்தனர். போலீஸாரும் அக்கட்டிடத்தை சுற்றி வளைத்தனர். போலீஸார் விரைந்து செயல்பட்டு பிடித்து வைக்கப்பட்டிருந்த குழந்தைகளை பத்திரமாக மீட்டு ரோஹித்தை கைது செய்தனர்.
சம்பவ இடத்திலிருந்து ஒரு துப்பாக்கி மற்றும் சில ரசாயன பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. நாக்பூரைச் சேர்ந்த ஆர்யா மும்பை செம்பூரில் வசித்து வந்தார். அவர் சற்று மனநிலை பாதிக்கப்பட்டு இருந்ததாக போலீஸார் தெரிவித்தனர். அவரிடம் விசாரணை நடத்தி வருவதாக போலீஸார் தெரிவித்தனர்.
மீட்கப்பட்ட குழந்தைகள் யாருக்கும் எந்த வித பாதிப்பும் ஏற்படவில்லை என்றும் போலீஸார் தெரிவித்தனர். இது குறித்து போலீஸார் மேலும் கூறுகையில்,''சம்பந்தப்பட்ட நபர் வெப் சீரியஸில் நடிக்க ஆட்கள் தேவை என்று கூறி 100 குழந்தைகளை ஒத்திகைக்கு அழைத்திருக்கிறார். அவர்களில் 83 பேரை அனுப்பி விட்டு 17 பேரை மட்டும் பிடித்து வைத்துக்கொண்டார். அவர்களுடன் மேலும் இரண்டு பேர் இருந்தனர்''என்று தெரிவித்தனர்.
















