Ooty: இயற்கை உபாதை கழிக்க ஒதுங்கிய இளைஞர்; தலை குதறப்பட்டு ரத்த வெள்ளத்தில் சரிந...
கோமா நிலையிலும் என் மகன் விஜய்யை மறக்கவில்லை: நாசர்
நடிகர் நாசர் தன் மகன் மற்றும் நடிகர் விஜய் குறித்து நெகிழ்ச்சியாகப் பேசியுள்ளார்.
இந்திய சினிமாவில் குணச்சித்திர நடிகர்களில் முன்னணி நடிகராக இருப்பவர் நாசர். தமிழ், தெலுங்கு என ஆண்டிற்கு பல படங்களில் விதவிதமான கதாபாத்திரங்களில் நடித்து தன்னை சிறந்த நடிகராக நிரூபித்துக்கொண்டவர்.
நடிகர் சூர்யாவின் ரெட்ரோ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த நிலையில், நேர்காணல் ஒன்றில் கலந்துகொண்ட நாசர் தன் மகன் ஃபைசல் குறித்து பேசியுள்ளார்.
அதில், “என் மகன் ஃபைசல் நடிகர் விஜய்யின் மிகத்தீவிரமான ரசிகன். எனக்கு மகனாக பிறந்து யாரோ ஒருவருக்கு ரசிகனாக இருக்கிறாயே எனக் கேட்பேன். ’அந்தந்த வயதில் அப்படித்தான் இருப்போம்’ என்பான். நடிகர் விஜய்யை அவன் சிலமுறை நேரில் சந்தித்திருக்கிறான். அவருக்கும் ஃபைசல் தன் தீவிரமான ரசிகர் என்பது தெரியும். பின், என் மகன் 14 நாள்கள் சுயநினைவை இழந்து கிட்டத்தட்ட கோமா நிலையில் இருந்தான். சிங்கப்பூரில் சிகிச்சையிலிருக்கும்போது மெல்ல நினைவு திரும்பியதும் அவன் அப்பா, அம்மா என யாரையும் கூப்பிடவில்லை.
இதையும் படிக்க: 2024 - ரூ. 650 கோடி நஷ்டத்தைச் சந்தித்த மலையாளத் திரையுலகம்!
அவன் கூறிய பெயர் விஜய்தான். அவனுக்கு விஜய் என்கிற பெயரில் ஒரு நண்பனும் இருக்கிறான். அவனைத்தான் நினைக்கிறான் என அந்தப் பையனை அழைத்து வந்தோம். ஆனால், என் மகன் அவனைப் பார்த்து எந்த சலனும் அடையவில்லை. உளவியல் நிபுணரான என் மனைவிதான் என்னிடம் சொன்னார், அவன் நடிகர் விஜய்யை நினைத்திருக்கலாம் என. உடனே, விஜய்யின் புகைப்படங்கள், திரைப்படக் காட்சிகளைப் ஃபைசலுக்கு காட்டினோம். அதன்பின்பே, என் மகனுக்கு நினைவு வரத் தொடங்கியது. இதை அறிந்த நடிகர் விஜய் என் மகனைச் சந்திக்க வந்தார். ஒருமுறை அல்ல; பலமுறை வீட்டுக்கு வந்த விஜய் என் மகனுடன் நேரம் செலவிட்டார்.
ஃபைசலுக்கு கித்தார் வாசிக்கத் தெரியும் என்பதால் ஒரு இசைக்கருவியை வாங்கிக்கொடுத்த விஜய் என் மகனிடம், ‘ஒருநாள் நீ வாசிப்பாய். எனக்குத் தெரியும்’ என்றார். அதற்குப் பிறகு, ஒருமுறை என் மகன் பிசியோதெரபி செய்ய கடுமையாக மறுத்துவிட்டான். நான் விஜய்க்கு விடியோ கால் செய்துகொடுத்தேன். ‘ஒழுங்காக பிசியோதெரபி செய்தால்தான் என்னுடன் நடிக்க, நடனமாட உன்னால் முடியும்’ என விஜய் சொன்னதால் அவன் அதற்கு ஒப்புக்கொண்டான்.
இப்போது சிறிய முன்னேற்றங்கள் இருந்தாலும் பல விஷயங்களை அவன் மறந்துவிடுவான். ஆனால், விஜய்யின் பெயரைச் சொன்னால் சில நினைவுகள் வந்துவிடும். விஜய் கட்சி ஆரம்பித்தது தெரிந்ததும் அவனுடைய நண்பர்களிடம் சொல்லி, தமிழக வெற்றிக் கழகத்தில் உறுப்பினராகிவிட்டான். என் மகன் வாழ்வில் நடிகர் விஜய்க்கு பெரிய இடம் இருக்கிறது.” என நெகிழ்ச்சியாக சில நினைவுகளைப் பகிர்ந்துள்ளார் நாசர்.
நடிகர் நாசருக்கு மூன்று மகன்கள் உள்ளனர். ஃபைசலை தவிர மற்ற இரண்டு மகன்களான லுத்ஃபுதீன், அபி ஹாசன் இருவரும் நடிகர்களாக இருக்கின்றனர்.