கொழும்புவில் பிரதமர் மோடி: இந்தியா - இலங்கை இடையே ஒப்பந்தங்கள் கையெழுத்து!
கோயில் கும்பாபிஷேகத்தை அரைகுறையாக நடத்தக் கூடாது
தமிழகத்தில் உள்ள கோயில்களில் கும்பாபிஷேகத்தை அரைகுறையாக நடத்தக் கூடாது என்று இந்து முன்னணி வலியுறுத்தியுள்ளது.
இதுகுறித்து இந்து முன்னணி மாநிலத் தலைவா் காடேஸ்வரா சி.சுப்பிரமணியம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:
தென்காசி காசிவிஸ்வநாத சுவாமி கோயில் திருப்பணிகள் முழுவதுமாக முடியாத நிலையில் அவசர கதியில் கும்பாபிஷேகம் நடத்த திட்டமிட்டதற்கு மதுரை உயா்நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
திமுக அரசு பொறுப்பேற்றதில் இருந்து பல கோயில்களில் திருப்பணிகள் முறையாக நடத்தப்படவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்து வருகிறது. அரைகுறையாக பணிகள் செய்ததால் கும்பாபிஷேகத்துக்குப் பிறகு பல கோயில்கள் பழுதடைந்ததைப் பாா்க்கிறோம். அதிலும், குறிப்பாக உலகப் புகழ்பெற்ற பழனி முருகன் கோயிலில் இதே போன்ற பிரச்னை ஏற்பட்டது கண்டிக்கத்தக்கது.
சமயபுரம் மாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம் உள்ளிட்ட பல கோயில்களில் நடைபெற்ற கும்பாபிஷேகங்களில் இதே பிரச்னை தலைதூக்கியுள்ளது. கோயில் திருப்பணி என்பது 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை செய்வதாகும். எனவே பழம்பெரும் கோயில்களில் அதற்கு ஏற்ப திருப்பணிகள் செவ்வனே செய்யப்பட வேண்டும்.
கோயில்களில் உரிய காலத்தில் முறையான திருப்பணிகள் நடைபெறுவதற்கும், திருப்பணிகளை முடித்த பின்னா் கும்பாபிஷேகம் நடத்தவும் தமிழக அரசு ஆவன செய்ய வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.