ஏன் வேண்டாம் மும்மொழி? மத்திய அமைச்சருக்கு அன்பில் மகேஸ் பதில்!
கோயில் விழாவில் ஆக்ரோஷமாக மோதிக்கொண்ட யானைகள்; அலறிய பக்தர்கள் - 3 பேர் பலி... 32 பேர் காயம்!
கேரள மாநிலத்தில் கோயில் விழாக்களில் யானைகள் முக்கிய அங்கம் வகிக்கின்றன. சுவாமி எழுந்தருளல், ஊர்வலம் உள்ளிட்டவைகளுக்கு யானைகள் பயன்படுத்தப்படுகின்றன. இந்த நிலையில் கோழிக்கோடு மாவட்டம், கோயிலாண்டி மணக்குளங்கர பகவதி கோயில் திருவிழாவில் நேற்று இரவு யானை மீது சுவாமி எழுந்தருளல் நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது ஒரு யானைக்கு மதம் பிடித்து மற்றொரு யானையை தந்தத்தால் குத்தியது. இதையடுத்து இரண்டு யானைகளும் மாறிமாறி ஆக்ரோஷமாக மோதிக்கொண்டன. யானைகள் அங்கும் இங்கும் ஓடின. யானைகள் மோதிக்கொண்டதை அடுத்து அங்கிருந்த பொதுமக்களும் பயத்தால் கோயில் வளாகத்தில் இருந்து வெளியேறினர். யானைகளுக்கிடையே சிக்கியும், பொதுமக்கள் பயந்து அங்கும் இங்கும் ஓடியதாலும் சுமார் 32 பேருக்கு காயம் ஏற்பட்டது.
![](https://gumlet.vikatan.com/vikatan/2025-02-13/fn6vrkaq/1000041148.jpg)
காயம் அடைந்தவர்கள் கோயிலாண்டி அரசு தாலுகா மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். அதில் படுகாயம் அடைந்த 7 பேர் ஆபத்தான நிலையில் கோழிக்கோடு அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக கொண்டுசெல்லப்பட்டனர். இதற்கிடையே அம்முக்குட்டி (70), லீலா (65), ராஜன் ஆகியோர் யானைகள் மோதல் காரணமாக படுகாயம் ஏற்பட்டு மரணமடைந்தனர்.
![](https://gumlet.vikatan.com/vikatan/2025-02-13/hwhdiafo/1000041150.jpg)
யானைகள் சுமார் 45 நிமிடங்கள் மோதிக்கொணடன. பின்னர் பாகன்கள் யானைகளை ஒருவழியாக சமாதானம் செய்து கட்டினர். யானைகள் மோதிக்கொண்டதில் கோயில் அலுவலக கட்டடதின் ஒருபகுதி உடைந்தது. மேலும் அங்கிருந்த பொருள்கள் சேதம் அடைந்தன. யானைகள் மோதிக்கொண்டதில் 3 பேர் பலியான சம்பவம், கேரளாவில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.