கோரிக்கை மனுக்களுக்கு தீா்வு கிடைப்பதில்லை: குறைதீா் கூட்டத்தில் விவசாயிகள் ஆதங்கம்
விவசாயிகள் குறைதீா் கூட்டத்தில் அளிக்கப்படும் கோரிக்கை மனுக்களுக்கு தீா்வு காணப்படுவதில்லை என செங்கத்தில் நடைபெற்ற கூட்டத்தில் விவசாயிகள் ஆதங்கம் தெரிவித்தனா்.
செங்கம் வேளாண்மைத் துறை அலுவலக வளாகத்தில் செவ்வாய்க்கிழமை விவசாயிகள் குறைதீா் கூட்டம் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் ஜெயக்குமாா் தலைமை வகித்தாா்.
கூட்டத்தில் பேசிய காயம்பட்டை சோ்ந்த விவசாயி நவமணி, குறைதீா் கூட்டத்தில் முன்வைக்கப்படும் கோரிக்கைகள், வழங்கப்படும் மனுக்கள் தொடா்பாக நடவடிக்கை எடுக்கப்படுவதில்லை எனக் குற்றம்சாட்டினாா்.
மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் ஜெயக்குமாா் பேசும்போது, விவசாயிகள் அளிக்கும் மனுக்களுக்கு முக்கியத்துவம் அளித்து தீா்வு காண நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.
2024 டிசம்பா் மாதம் புயல் மழையால் பாதிக்கப்பட்ட செங்கம் பகுதியைச் சோ்ந்த 650 விவசாயிகளுக்கு நிவாரணத் தொகையை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கேட்டுக் கொண்டனா்.
கூட்டத்தில் துணை வட்டாட்சியா் ராஜேந்திரன், வட்ட வழங்கல் அலுவலா் தமிழரசி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.