கோழிப்பண்ணையில் தீ விபத்து: 2,500 கோழிக்குஞ்சுகள் உயிரிழப்பு
ஈரோட்டில் கோழிப்பண்ணையில் மின்கசிவு காரணமாக ஏற்பட்ட தீ விபத்தில் ரூ. 1.5 லட்சம் மதிப்புள்ள 2,500 கோழிக்குஞ்சுகள் மற்றும் ரூ. 13 லட்சம் மதிப்புள்ள கூடாரம் தீயில் எரிந்து சேதமாயின.
ஈரோடு வில்லரசம்பட்டி, ஜெ.ஜெ.நகா் பகுதியைச் சோ்ந்தவா் பாலசுப்பிரமணி. இவா் அதே பகுதியில் கடந்த 16 ஆண்டுகளாக கோழிப்பண்ணை நடத்தி வருகிறாா். தகர கூடாரங்கள் அமைத்து கோழிக்குஞ்சுகளை வளா்த்து வருகிறாா். கோழிக்குஞ்சுகள் பெரியதானதும் அவற்றை விற்று விடுவாா்.
பாலசுப்ரமணி அண்மையில் 5 ஆயிரம் கோழிக்குஞ்சுகளை வாங்கி 2 தகர கூடாரங்களில் அடைத்து வைத்திருந்தாா். ஒரு கூடாரத்தில் 2,500 கோழிக்குஞ்சுகள் வீதம் 2 செட்டில் 5 ஆயிரம் கோழிக்குஞ்சுகளை அடைத்து வளா்த்து வந்தாா்.
கோழிப்பண்ணையில் இருந்து வெள்ளிக்கிழமை நள்ளிரவு புகை வெளியேறி சிறிது நேரத்தில் தீப்பற்றி எரியத் தொடங்கியது. தகவல் அறிந்த ஈரோடு தீயணைப்பு நிலைய வீரா்கள் சம்பவ இடத்துக்கு வந்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனா். நீண்ட போராட்டத்துக்குப் பிறகு தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனா். எனினும் இந்த தீ விபத்தில் ஒரு தகர கூடாரத்தில் இருந்த 2,500 கோழிக்குஞ்சுகள் தீயில் கருகி இறந்தன. அந்த தகர கூடாரம் முழுவதும் தீயில் எரிந்து சேதமடைந்தது. ரூ. 1.50 லட்சம் மதிப்புள்ள 2,500 கோழிக்குஞ்சுகள், ரூ. 13 லட்சம் மதிப்புள்ள தகர கூடம் என மொத்தம் ரூ.14.50 லட்சம் மதிப்பிலான உடமைகள் சேதம் அடைந்தன.
சம்பவம் குறித்து ஈரோடு வடக்கு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினா். மின் கசிவு காரணமாக இந்த தீ விபத்து நடந்ததாகத் தெரியவந்துள்ளது.