கோவையில் அக். 9,10-ல் உலக புத்தொழில் மாநாடு: முதல்வர் ஸ்டாலின்
கோயம்புத்தூரில் வரும் அக். 9,10 ஆகிய தேதிகளில் உலக புத்தொழில் மாநாடு நடைபெறும் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
முதல்வர் ஸ்டாலின் இன்று (செப். 11) தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை சார்பில் நடைபெற்ற "தமிழ்நாடு முதலீட்டாளர்கள் மாநாடு 2025 - ஓசூர்"-இல் பங்கேற்றார்.
இதனைத் தொடர்ந்து, முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது:
”இன்று, இ-ஸ்கூட்டர் உற்பத்தியின் தலைநகராகவும் ஓசூர்தான் இருக்கிறது! இதன் தொடர்ச்சியாக இந்த மாநாடு, ஓசூரின் அடுத்தகட்ட உயர்வுக்கான கதவுகளைத் திறக்கும்! நான் அதை தொடர்ந்து கண்காணிப்பேன்.
ஸ்டாலின் என்ற பெயருக்கு ‘Man of Steel’-என்று பொருள்! உறுதியோடு சொல்கிறேன். எஃகு போன்ற உறுதியுடன் என்னுடைய இலக்குகளில் வெற்றி பெறுவேன்! எங்கள் அரசு மேல் நீங்கள் நம்பிக்கை வைத்து, முதலீடு செய்ய வந்திருக்கும் உங்களுக்குத் தேவையான ஒத்துழைப்பை நிச்சயமாக நாங்கள் வழங்க காத்திருக்கிறோம். வழங்குவோம். தமிழ்நாட்டுடன் இணைந்து பயணம் செய்தால் கண்டிப்பாக வெற்றி தான்!
அதனால் எப்போதும் உங்கள் முதலீடுகளை நம்முடைய தமிழ்நாட்டிலேயே மேற்கொள்ளுங்கள்! கடந்த மாநாட்டிலும் நான் சொன்னேன்… Tamil Nadu Rising மட்டுமல்ல. Tamil Nadu will keep on Rising-என்று சொன்னேன். நாளைய தமிழ்நாடு, வளர்ச்சிக்கு நல்லுதாரணமாக உலகத்திற்கு தன்னை வெளிப்படுத்தியிருக்கும் இந்த சிறப்பான மேடையில் இருந்து ஒரு அறிவிப்பை செய்ய நினைக்கிறேன்.
எம்எஸ்எம்இ துறை சார்பில், தமிழ்நாடு புத்தொழில் மற்றும் புத்தாக்க இயக்கம், அக்டோபர் 9 மற்றும் 10-ஆம் தேதிகளில், கோயம்புத்தூரில் ஒரு உலக புத்தொழில் மாநாட்டை நடத்த இருக்கிறது.
இந்த மாநாடு உலகம் முழுவதுமிருந்து தொழில் முனைவோர், முதலீட்டாளர்கள், இன்குபேட்டர்கள், புத்தொழில் முனைவோர் ஆகியோரை ஒருங்கிணைக்கும் வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வாக அமையும்.
ஸ்டார்ட்-அப் செக்டாரில் தமிழ்நாட்டின் வளர்ச்சியை இந்த மாநாடு உலகிற்கு பறைசாற்றும்!” என்றார்.
இதையும் படிக்க: மின்சுற்றுப் பலகை உற்பத்தி திட்டத்துக்கு அடிக்கல் நாட்டினார் முதல்வர் ஸ்டாலின்!