கோவை குற்றாலம் செல்ல இன்று சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதியில்லை!
கோவை: கோவை குற்றாலத்தில் சாலைப் பராமரிப்புப் பணி காரணமாக புதன்கிழமை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே, சுற்றுலாப் பயணிகள் கோவை குற்றாலம் வந்து ஏமாற வேண்டாம் என வனத்துறை அறிவித்துள்ளது.
கோவை நகர் பகுதியில் இருந்து மேற்கு பகுதியில் 35 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்து உள்ளது கோவை குற்றாலம். இயற்கை எழில் சூழ்ந்த சிறுவாணி மலைத் தொடரின் அடிவாரத்தில் வனப்பகுதி நிறைந்த இடமாக இருப்பது கோவை குற்றாலம்.
நீர்வீழ்ச்சியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டும். அதனால் சுற்றுலா பயணிகளின் கூட்டம் தினந்தோறும் அலை மோதுவது வழக்கம். இந்நிலையில் கோடை வெயில் காரணமாகவும், விடுமுறையின் பொழுது சுற்றுலாப் பயணிகளின் வருகை சற்று அதிகரித்து காணப்படும். ஒரு நாள் சுற்றுலா செல்ல விரும்புபவர்கள் இங்கு வந்தால் குடும்பத்துடன் மகிழ்ச்சியாக தங்களது பொழுதை கொண்டாடி மகிழ்வார்கள். கோவை நகருக்கு அருகில் அமைந்து உள்ளதால் முக்கிய சுற்றுலா தளமாக உள்ளது.
கோடை வெயில் தற்பொழுது அதிகரித்துக் காணப்படுவதால் அதிகளவில் சுற்றுலா பயணிகள் இங்கு வந்து குளித்து மகிழ்ந்து செல்கின்றனர். மேலும் விடுமுறை நாள்கள் வர இருப்பதால் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருவார்கள் என வனத் துறையினர் எதிர்பார்க்கின்றனர்.
இதனால் கோவை குற்றாலம் நீர்வீழ்ச்சி செல்லும் சாலைப் பராமரிப்புப் பணிகளை தற்பொழுது வனத் துறையினர் மேற்கொண்டு வருகின்றனர். இதன் காரணமாக புதன்கிழமை ஏப்ரல் 9-ம் தேதி அன்று சுற்றுலாப் பயணிகள் செல்ல அனுமதி இல்லை எனவும், மேலும் மறுநாள் வியாழக்கிழமை பத்தாம் தேதி அன்று வழக்கம் போல் வேலை நேரங்களில் சுற்றுலாப் பயணிகளுக்காக மீண்டும் திறக்கப்படும் என கோவை மாவட்ட வனத் துறையினர் அறிவிப்பு வெளியிட்டு உள்ளனர்.
எனவே இன்று அங்கு வரும் சுற்றுலா பயணிகள் ஏமாற வேண்டாம் எனவும் வனத்துறை அறிவிப்பு வெளியிட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.