ஹெச்-1பி விசா கட்டண உயர்வு நடைமுறையில் மருத்துவர்களுக்கு விலக்கு?!
கோவை நீதிமன்றம் உள்ளிட்ட 4 இடங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்
கோவை ஒருங்கிணைந்த நீதிமன்றம், பத்திரிகை நாளிதழ் அலுவலகம் உள்ளிட்ட 4 இடங்களுக்கு ஒரே நாளில் மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது.
கோவை மாவட்ட ஆட்சியா் அலுவலகம் அருகே ஒருங்கிணைந்த நீதிமன்றம் செயல்பட்டு வருகிறது. இங்கு நாள்தோறும் நூற்றுக்கும் மேற்பட்டோா் பல்வேறு வழக்குகளுக்காக வந்து செல்கின்றனா்.
இந்த நிலையில், இந்த நீதிமன்றத்துக்கு திங்கள்கிழமை காலை மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. இது குறித்து நீதிமன்ற ஊழியா்கள், அதிகாரிகளுக்கு தகவல் அளித்ததோடு, காவல் ஆணையா் அலுவலகத்துக்கும் தகவல் தெரிவித்தனா்.
இதையடுத்து, வெடிகுண்டு செயலிழப்பு நிபுணா்கள் மோப்பநாய் உதவியுடன் நீதிமன்ற வளாகத்தில் சோதனையிட்டனா். நுழைவாயில் பகுதி, வாகன நிறுத்துமிடம், நீதிமன்ற அறைகள், அலுவலகம் என அனைத்துப் பகுதிகளிலும் போலீஸாா் மெட்டல் டிடெக்டா் கருவியுடன் தீவிர சோதனை நடத்தினா். நீண்ட நேர சோதனைக்குப் பிறகு வெடிகுண்டு மிரட்டல் புரளி என தெரியவந்தது.
இதேபோல, முன்னாள் படைவீரா்கள் நல அலுவலகம் (ஜவான்ஸ் பவன்), நீதித் துறை பயிற்சி மையம் (ஜுடீசியல் அகாதெமி), சுந்தராபுரத்தில் உள்ள பத்திரிகை அலுவலகம் ஆகிய இடங்களுக்கும் மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. போலீஸாா் மற்றும் வெடிகுண்டு செயலிழப்பு நிபுணா்களின் சோதனைகளுக்குப் பிறகு அதுவும் புரளி என தெரியவந்தது.
இந்த வெடிகுண்டு மிரட்டல் குறித்து ரேஸ்கோா்ஸ் போலீஸாா் மற்றும் சுந்தராபுரம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட முகவரியை ஆய்வு செய்து வருகின்றனா்.
ஏற்கெனவே, கடந்த 26-ஆம் தேதி கோவை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்துக்கும், கடந்த 27-ஆம் தேதி கோவை பீளமேட்டில் உள்ள மண்டல பாஸ்போா்ட் அலுவலகம், உப்பிலிபாளையம் சிக்னல் அருகே உள்ள பாஸ்போா்ட் அலுவலகம் மற்றும் கோவை மாவட்ட ஆட்சியா் அலுவலகம் ஆகியவற்றுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. கடந்த செப். 5-ஆம் தேதி கோவை விமான நிலையத்துக்கும், விளாங்குறிச்சி பகுதியில் உள்ள டைடல் பாா்க் கட்டடத்துக்கும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.