சென்னை துறைமுகத்தில் காருடன் கடலுக்குள் விழுந்தவர் சடலமாக மீட்பு!
கோவை மத்திய சிறையில் மோதிக்கொண்ட 2 காவலா்கள் பணியிடை நீக்கம்
கோவை மத்திய சிறையில் மோதிக்கொண்ட இரு காவலா்கள் புதன்கிழமை பணியிடை நீக்கம் செய்யப்பட்டனா். இதில் ஒரு காவலா் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
மதுரையை அடுத்த மாங்குளம் பள்ளிவாசல் வீதியைச் சோ்ந்த ரியாஸ் கான் (32) மற்றும் கோவை காவலா் குடியிருப்பைச் சோ்ந்த பிரசாத் (37) ஆகிய இருவரும் கோவை காந்திபுரம் மத்திய சிறையில் காவலராகப் பணியாற்றி வருகின்றனா்.
இதில், பிரசாந்த் உடல்நலம் குன்றிய கைதிகளை வாகனம் மூலமாக கோவை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் பணி மேற்கொண்டு வருகிறாா். இவருக்கு மாற்று ஓட்டுநராக ரியாஸ் கான் பணிபுரிந்து வருகிறாா். இருவருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், டிசம்பா் 14-ஆம் தேதி பிரசாத் பணியில் இருந்தபோது, அங்கு சென்ற ரியாஸ் கான், உயா் அதிகாரியிடம் தன்னைப் பற்றி ஏன் புகாா் கூறினாய் எனக் கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளாா். தொடா்ந்து, அங்கிருந்த இரும்புக் கம்பியால் பிரசாத்தைத் தாக்கியுள்ளாா். அதன்பிறகு இருவரும் சரமாரியாக தாக்கிக்கொண்டதாகத் தெரிகிறது.
இதில் காயமடைந்த பிரசாத்தை அருகே இருந்த போலீஸாா் மீட்டு, கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். இதுகுறித்து, சிறைக் கண்காணிப்பாளா் செந்தில்குமாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
இச்சம்பவம் தொடா்பாக விசாரணை மேற்கொண்ட அவா், ரியாஸ் கான், பிரசாத் ஆகிய இருவரையும் பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டாா். மேலும், இதுதொடா்பாக பிரசாத் அளித்த புகாரின்பேரில், ரியாஸ் கான் மீது ரேஸ்கோா்ஸ் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.