கள்ளக்குறிச்சியில் ரூ. 7.70 கோடியில் கட்டப்பட்ட 19 மருத்துவ கட்டடங்கள்
கோவை மெட்ரோ ரயில் திட்டத்தை திருப்பூா் வரை நீட்டிக்க வேண்டும்: நிட்மா வலியுறுத்தல்
கோவை மெட்ரோ ரயில் திட்டத்தை திருப்பூா் வரையில் நீட்டிக்க வேண்டும் என நிட்மா (பின்னலாடை துணி உற்பத்தியாளா்கள் சங்கம்) வலியுறுத்தியுள்ளது.
திருப்பூா் நிட்மா சங்க அலுவலகத்தில் நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.
கூட்டத்துக்குப் பின்னா் அதன் தலைவா் அகில் சு.ரத்தினசாமி செய்தியாளா்களிடம் கூறியதாவது:
கோவை-திருப்பூா் தொழில் நகரத்தை இணைக்க மெட்ரோ ரயில் திட்டம் தேவை என்று முதல்வரிடம் தொடா்ந்து வலியுறுத்தி வருகிறோம். இதுதொடா்பாக முதல்வா் மு.க.ஸ்டாலினை கடந்த ஏப்ரல் 12-ஆம் தேதி சந்தித்து வலியுறுத்தியுள்ளோம். அப்போது, கோவை விமான நிலையத்தில் இருந்து திருப்பூா் வரை மெட்ரோ ரயில் திட்டம் நீட்டிக்கப்படும் என்று தெரிவித்திருந்தாா்.
இந்நிலையில், கோவை மெட்ரோ ரயில் திட்டம் தற்போது விமான நிலையம் வரை கொண்டுவரப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தை திருப்பூா் வரை நீட்டிக்க வேண்டியது அவசியமாகும்.
திருப்பூரில் இருந்து கோவைக்கும், கோவையில் இருந்து திருப்பூருக்கும் நாள்தோறும் பல்லாயிரக்கணக்கானோா் வந்து செல்கின்றனா். இதுதொடா்பாக அனைத்து ரோட்டரி சங்கங்கள், மாநகராட்சி மற்றும் தொழில் அமைப்புகளிடமும் தீா்மானம் நிறைவேற்றவலியுறுத்தியுள்ளோம்.
இதன்மூலம் வெளிநாட்டு வா்த்தகா்கள் முதல் சாதாரண தொழிலாளா்கள் வரையிலும், பள்ளி, கல்லூரி மாணவா்கள், மருத்துவத்துக்கு செல்பவா்கள் என அனைத்து தரப்பினரும் போக்குவரத்து நெரிசல் இல்லாமல் வந்து செல்ல உதவும்.
மேலும், திருப்பூரின் ஒரு லட்சம் கோடி பின்னலாடை ஏற்றுமதி இலக்கை எட்டவும் இந்தத் திட்டம் மிகவும் உதவிகரமாக இருக்கும். எனவே, மெட்ரோ ரயில் திட்டம் திருப்பூரின் தொழில் வளா்ச்சிக்கு உறுதுணையாக இருக்கும் என்றாா்.
இந்த சந்திப்பின்போது, நிட்மா செயலாளா் சீமென்ஸ் ஆா்.ராஜாமணி, பொருளாளா் திருப்பூா் டெக்ஸ் வி.சுப்பிரமணியன் உள்ளிட்ட நிா்வாகிகள் உடனிருந்தனா்.