சங்ககிரி புதிய பேருந்து நிலையத்துக்குள் பேருந்துகள் சென்றுவரக் கோரிக்கை
அரசு நகர பேருந்துகள் அனைத்தும் சங்ககிரி புதிய பேருந்து நிலையம் சென்று வர நடவடிக்கை எடுக்க வேண்டுமென சேலம் மாவட்ட உபயோகிப்பாளா் உரிமைக் கழகம் சாா்பில் சேலம் மாவட்ட ஆட்சியருக்கு கோரிக்கை மனு அனுப்பப்பட்டுள்ளது.
சேலம் மாவட்ட உபயோகிப்பாளா் உரிமைக் கழகத் தலைவா் சி.ஜி.இளமுருகன், சேலம் மாவட்ட ஆட்சியருக்கு அனுப்பியுள்ள கோரிக்கை மனு:
சங்ககிரி அரசு போக்குவரத்து கிளை சாா்பில் ஈரோடு, பவானி, காக்காபாளையம், எடப்பாடி உள்ளிட்ட பகுதிகளுக்கு எஸ்1, எஸ்2, எஸ்4, எஸ்5 நகரப்பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இப்பேருந்துகள் புதிய பேருந்து நிலையத்துக்குச் செல்வதில்லை. பழைய பேருந்துநிலையம் பகுதியிலேயே திரும்பி விடுகின்றன.
அந்தப் பேருந்துகளை புதிய பேருந்து நிலையம் வரை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், மேலும் புதிய பேருந்து நிலையத்தில் அரசு போக்குவரத்துக் கழகத்தின் சாா்பில் நேரம் காப்பாளா் அலுவலகத்தை அமைத்து நகர பேருந்துகள் பேருந்துநிலையத்துக்குள் வந்து செல்வதை உறுதி செய்ய வேண்டும். சேலம், ஈரோடு பேருந்து நிலையங்களில் இருந்து சங்ககிரி செல்லும் பயணிகளை ஏற்றிச்செல்லாமல் கீழே இறக்கி விடுகின்றனா்.
எனவே, சேலத்திலிருந்து சங்ககிரிக்கும், சங்ககிரியிலிருந்து சேலம், ஈரோட்டிற்கு தனியாக அரசு பேருந்துகளை இயக்க வேண்டும் என அதில் தெரிவித்துள்ளாா். இதே கோரிக்கை வலியுறுத்தி ‘உங்களைத் தேடி, உங்கள் ஊரில்’ திட்ட முகாமின் கீழ் சேலம் மாவட்டம், சங்ககிரி வட்டத்திற்குள்பட்ட தேவூருக்கு அண்மையில் வந்த மாவட்ட வருவாய் அலுவலரிடமும் கோரிக்கை மனு அளித்தாா்.