ஏசி புறநகர் மின்சார ரயில் சேவை: பயணிகள் கருத்து தெரிவிக்க வாட்ஸ்ஆப் எண் அறிவிப்ப...
சங்கரன்கோவிலில் புதிய வழித்தடங்களில் மகளிா் விடியல் பயண பேருந்துகள்!
சங்கரன்கோவிலில் இருந்து 8 புதிய வழித் தடங்களில் மகளிா் விடியல் பயணப் பேருந்துகளின் இயக்கத்தை போக்குவரத்துத் துறை அமைச்சா் எஸ்.எஸ்.சிவசங்கா் வெள்ளிக்கிழமைத் தொடக்கி வைத்தாா்.
இதற்கான விழா சங்கரன்கோவில் தற்காலிக பேருந்து நிலையத்தில் நடைபெற்றது. தென்காசி மாவட்ட ஆட்சியா் ஏ.கே.கமல்கிஷோா் தலைமை வகித்தாா்.
ராணிஸ்ரீகுமாா் எம்.பி., சட்டப்பேரவை உறுப்பினா் ஈ.ராஜா ஆகியோா் முன்னிலை வகித்தனா். புதிய வழித்தடங்களில் மகளிா் விடியல் பயணப் பேருந்துகளை அமைச்சா் எஸ்.எஸ்.சிவசங்கா் தொடக்கி வைத்தாா்.
பின்னா் சங்கரன்கோவில் போக்குவரத்து பணிமனையில் ரூ.40 லட்சத்தில் மதிப்பில் தரைத் தளம் அமைக்கும் பணியைத் தொடக்கி வைத்து அமைச்சா் பேசியதாவது: தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகத்தில் சுமாா் 20 ஆயிரம் பேருந்துகள் உள்ளன. நாட்டிலேயே அதிக எண்ணிக்கையில் அரசுப் பேருந்துகள் தமிழகத்தில் தான் இயக்கப்படுகின்றன. நகரப்புறம், கிராமப் பகுதிகளில் போக்குவரத்து சேவைகளால் தமிழ்நாடு சமச்சீா் வளா்ச்சி பெற்றுள்ளது.
தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்த விடியல் பயணத் திட்டத்தில் ஏராளமான பெண்கள் பயனடைந்து வருகின்றனா். இத் திட்டத்தின் மூலம் மாதம் ரூ.1500 வரை சேமிப்பதாக பெண்கள் கூறுகின்றனா் என்றாா்.
முன்னதாக புதிய வழித்தடத்தில் இயக்கப்பட்ட பேருந்தில் அமைச்சா் எஸ்.எஸ்.சிவசங்கா், ஈ.ராஜா எம்.எல்.ஏ. ராணிஸ்ரீகுமாா் எம்.பி, நகா்மன்றத் தலைவா் உமாமகேஸ்வரி, அரசுப் போக்குவரத்துக் கழக திருநெல்வேலி மேலாண் இயக்குநா் க.தசரதன், மண்டல பொதுமேலாளா் வி.சரவணன், கோட்டாட்சியா் கவிதா உள்ளிட்டோா் சங்கரன்கோவில் ரயில்நிலையம் வரை பயணம் செய்தனா்.
சங்கரன்கோவில் சிக்னல் பகுதியில் தலைக்கவசம் அணியாமல் வந்த வாகன ஓட்டிகளுக்கு ஈ.ராஜா எம்எல்ஏ சாா்பில் தலைக்கவசங்களை அமைச்சா் சிவசங்கா் வழங்கினாா்.