1ஆம் வகுப்பு முதல் ஹிந்தி கட்டாயமாக்கப்பட்டால் பள்ளிகள் மூடப்படும்: ராஜ் தாக்கரே
சங்கரன்கோவில் நகராட்சியில் நம்பிக்கை இல்லா தீர்மானம்; உமா மகேஸ்வரி மீண்டும் தோல்வி.. பின்னணி என்ன?
சங்கரன்கோவில் நகர்மன்ற தலைவி மீது நம்பிக்கையில்லா தீர்மானம், நீதிமன்ற அறிவுறுத்தலின்படி மீண்டும் மறைமுக வாக்கெடுப்பு நேற்று நடைபெற்றது. இதில் 28 உறுப்பினர்கள் கலந்து கொண்டு வாக்கினை பதிவு செய்ததனர். நம்பிக்கையில்லா தீர்மானம் வெற்றி பெற்றதாக நகராட்சி ஆணையர் அறிவித்தார்.
சங்கரன்கோவில் நகராட்சி 30 வார்டுகளை உள்ளடக்கிய பகுதியாகும். சங்கரன்கோவில் நகராட்சி நகர்மன்ற தேர்தலில் நகராட்சிக்கு உள்பட்ட 30 வார்டுகளில் 156 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். இதில் திமுகவிலிருந்து 9 உறுப்பினர்களும், அதிமுகவிலும் 12 உறுப்பினர்களும், மதிமுகவில் இருந்து 2 உறுப்பினர்களும், காங்கிரஸ், எஸ்டிபிஐ தலா ஒரு உறுப்பினரும், சுயேட்சையாக 5 உறுப்பினர்கள் என மொத்தம் 30 கவுன்சிலர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

இவர்களில் மதிமுக காங்கிரஸ் மற்றும் சுயேட்சையாக வெற்றி பெற்றவர்கள் திமுகவுக்கு ஆதரவளித்தனர். இந்நிலையில் கடந்த 2022 மார்ச் 4ஆம் தேதி நடந்த நகர மன்ற சேர்மன் தேர்தலில் திமுக சார்பில் உமா மகேஸ்வரி அதிமுக சார்பில் முத்துலட்சுமியும் போட்டியிட்டனர். இந்த மறைமுக வாக்கெடுப்பில் இருவருமே தலா 15 வாக்குகளைப் பெற்று நிலையில், தேர்தல் அதிகாரி முன்னிலையில் குலுக்கல் முறையில் சேர்மனாக உமாமகேஸ்வரி தேர்ந்தெடுக்கப்பட்டார். துணைத் தலைவர் தேர்தலில் அதிமுக சார்பில் கண்ணன் என்ற ராஜு போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
தென்காசி மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் சரவணன் மனைவியான இவர் நகராட்சி பொறுப்பு ஏற்ற நாளிலிருந்து மக்கள் பணிகளை செய்யவில்லை ஆளும் கட்சியினர்களை கூட மதிக்கவில்லை என தொடர்ந்து குற்றச்சாட்டுகள் எழுந்த நிலையில், கடந்த 2003 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் இவருக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவரப்பட்டது.

அப்போது கட்சியின் மூத்த அமைச்சர்கள் தலையிட்டு பிரச்னையை சுமூகமாக பேசி முடித்தனர். மீண்டும் மக்கள் பிரச்னைகளை கவனிப்பதில்லை, ஆளுங்கட்சி கவுன்சிலர்களுக்கு மரியாதை அளிப்பதில்லை, என திமுக, அதிமுக உள்ளிட்ட 24 கவுன்சிலர்கள் ஆணையாளர் (பொறுப்பு) நாகராஜனிடம் மனு அளித்தது மட்டுமல்லாமல் அறிவாலயத்திற்கு சென்று புகார் அளித்தனர்.
இதனைத் தொடர்ந்து இந்த மாதம் 2-ம் தேதி நகர்மன்ற தலைவி உமா மகேஸ்வரி மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் குரல் வாக்கெடுப்பு நடைபெற்றது. இந்த நம்பிக்கை இல்லா தீர்மானத்திற்கு 28 உறுப்பினர்கள் ஆதரவு தெரிவித்தனர். இதைத் தொடர்ந்து நம்பிக்கை இல்லா தீர்மானம் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டு நகர்மன்ற தலைவி பதவியை இழந்தார் உமா மகேஸ்வரி.

இதனை அடுத்து நம்பிக்கை இல்லா தீர்மானம் வாக்கு சீட்டு முறையை பயன்படுத்தி மறைமுக வாக்கெடுப்பு நடத்த வேண்டுமென உமா மகேஸ்வரி சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்தார். விசாரணை மேற்கொண்ட நீதிமன்றம் நேற்று ரகசிய வாக்கெடுப்பு நடத்த சங்கரன்கோவில் நகராட்சி ஆணையாளருக்கு அறிவுறுத்தியது.
நகராட்சி அலுவலகத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்ட நிலையில், நகர மன்ற உறுப்பினர்கள் அனைவருமே பலத்த சோதனைகளுயிடையே நகராட்சி அலுவலகத்திற்குள் உள்ளே அனுமதிக்கப்பட்டனர்.
இதில் 11 மணிக்கு நடைபெற வேண்டிய வாக்கெடுப்பு 11.30 ஆகியும் நடைபெறாததால் நீதிமன்ற அறிவுறுத்தலை பின்பற்றாமல் நகராட்சி ஆணையாளர் ஒரு தலைபட்சமாக செயல்படுவதாக நகர்மன்ற தலைவியாக இருந்த உமா மகேஸ்வரி நகராட்சி ஆணையாளரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
அவருக்கு ஆதரவாக 17 -வது வார்டு நகர மன்ற உறுப்பினர் விஜயகுமாரும் நகராட்சி ஆணையரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு வாக்கு செலுத்தும் பெட்டியை கீழே தள்ளிவிட்டனர். இதனால் நகர் மன்ற கூட்ட அரங்கம் பரபரப்பாக காணப்பட்டது.

பின்னர் நகர் மன்ற தலைவி உமா மகேஸ்வரி மற்றும் நகர் மன்ற உறுப்பினர் விஜயகுமார் ஆகிய இருவரையும் காவல்துறையினர் சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர்.
இதனை அடுத்து நகராட்சி ஆணையாளர் நம்பிக்கை இல்லா தீர்மானத்திற்கு மறைமுக வாக்குச்சீட்டு வாக்குப்பதிவினை நடத்தினார். இதில் மொத்தமுள்ள 30 உறுப்பினர்களில் 28 உறுப்பினர்கள் மட்டுமே கலந்து கொண்டு வாக்கு செலுத்தினர்.
அதனால் நம்பிக்கை இல்லா தீர்மானத்திற்கு 28 உறுப்பினர்கள் ஆதரவு தெரிவித்ததால் நம்பிக்கை இல்லா தீர்மானம் வெற்றி பெற்றதாக நகராட்சி ஆணையாளர் தெரிவித்தார்.
சம்பவம் தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த நகர்மன்ற தலைவி உமா மகேஸ்வரி நகராட்சி ஆணையாளர் ஒரு தலைப்பட்சமாக செயல்பட்டு வருவதாகவும், நாங்கள் வேறு ஒரு நகராட்சி ஆணையாளர் மூலம் நம்பிக்கை இல்லா தீர்மான வாக்கெடுப்பு நடத்த வேண்டுமென நீதிமன்றம் சென்றுள்ளோம். நீதிமன்றமும் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளது. மேலும் இது சம்பந்தமாக மீண்டும் நீதிமன்றத்தில் முறையிட உள்ளோம்” என கூறினார்.

சங்கரன்கோவில் நகராட்சியில் நேற்று நடைபெற்ற நகர்மன்ற தலைவி உமாமகேஸ்வரி மீது நம்பிக்கை இல்லா தீர்மானத்தின் போது உமா மகேஸ்வரி மற்றும் அவரது ஆதரவாளரும் 17 -வது வார்டு நகர்மன்ற உறுப்பினரான விஜயகுமார் ஆகிய இருவரும் சங்கரன்கோவில் நகராட்சி ஆணையரிடம் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டு வாக்கு செலுத்தும் பெட்டியை தள்ளிவிட்டனர். இதனால் நகர்மன்ற கூட்டரங்கில் பரபரப்பு காணப்பட்டது.
இதனை அடுத்து நகராட்சி ஆணையர் (பொறுப்பு) நாகராஜ் சங்கரன்கோவில் நகர் காவல் நிலையத்தில் அரசு பணியை செய்ய விடாமல் தடுத்ததாக உமா மகேஸ்வரி மற்றும் நகர்மன்ற உறுப்பினர் விஜயகுமார் ஆகியோர் மீது புகார் அளித்துள்ளனர்.