TVK Vijay: ``தவெக விமர்சனம் செய்தாலும், பாஜக விஜயை கெஞ்சுவது ஏன்?'' - மாணிக்கம் தாகூர் கேள்வி
விருதுநகரில் காமராஜரின் பிறந்த நாளை முன்னிட்டு காங்கிரஸ் கட்சி சார்பில் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் 10 மற்றும் 11 வகுப்பில் முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவ, மாணவிகளுக்கு `காமராஜர் விருது' வழங்கும் விழா விருதுநகர் எம்பி மாணிக்கம் தாகூர் தலைமையில் நடைபெற்றது.
இதில் சிறப்பு விருந்தினராக தமிழ்நாடு காங்கிரஸ் சட்டமன்ற கட்சி தலைவர் ராஜேஷ்குமார் கலந்து கொண்டு விருதுகளை வழங்கினார்.

பூரண மதுவிலக்கு
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த எம்பி மாணிக்கம் தாகூர்,
காமராஜர் எதிர்பார்த்த பூரண மதுவிலக்கை காங்கிரஸ் கட்சி சட்டமன்றத்தில் குரல் கொடுக்குமா? என்ற கேள்விக்கு,
"தமிழகத்தில் பூரண மதுவிலக்கை ஆதரித்து காங்கிரஸ் சட்டமன்றத்தில் குரல் கொடுத்து வருகிறது. தற்போது படிப்படியாக மதுவிலக்கை அமல்படுத்துவோம் என திமுக அரசு கூறியிருக்கிறது. ஆனால் காங்கிரஸ் கட்சியின் நோக்கம் பூரண மதுவிலக்கு என்பதுதான்" என்றார்.
`ராஜேந்திர பாலாஜியின் விமர்சனம் என்பது..'
தற்போது இருப்பது காமராஜரின் காங்கிரஸ் அல்ல, இத்தாலி காங்கிரஸ் என்ற ராஜேந்திர பாலாஜியின் விமர்சனதிற்கு பதில் அளித்த அவர்,
“தற்போதுள்ள அதிமுக ஜெயலலிதா இருக்கும்போது இருந்த அதிமுக கிடையாது, அமித்ஷா அதிமுக. எம்ஜிஆர் உருவாக்கிய அதிமுக இல்லை இது அடிமை அதிமுக, அடகு வைக்கப்பட்ட அதிமுக. எப்போது வேண்டுமானாலும் பாஜகவுடன் இணைய துடிக்கும் அடிமைகளை கொண்ட அதிமுகவாக இருக்கிறது. இதற்கெல்லாம் முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பதில் சொல்லி விட்டால் மற்ற விஷயங் களை சீரியசாக பேசலாம்.
அவரைப் பொறுத்தமட்டில் மீண்டும் மக்களிடம் ஏதாவது விளம்பரம் தேட நினைக்கின்றார் அப்படித்தான் கேமரா மேன்களை அழைத்துச் சென்று தியானம் இருப்பதைப் போன்ற வீடியோக்களை வெளியிடுகிறார்.
கடந்த தேர்தலில் ராஜபாளையம் தொகுதி மக்கள் சரியான தண்டனை கொடுத்தார்களோ அதே போல் வரும் சட்டமன்ற தேர்தலில் விருதுநகரில் எந்த தொகுதியில் நின்றாலும் அவர் தோல்வி அடையப் போகிறார். அந்த தோல்வி பயத்திலேயே அவர் காங்கிரஸை பற்றி பிதற்றுகிறார்.

அவர்கள் திமுகவினுடைய தோல்வியா அல்லது அதிமுகவினுடைய தோல்வியா என்பதற்கு பயப்படுவதற்கு பதிலாக முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணி போன்றவர்கள் மகாராஷ்டிரா மாடலில் ஏக்நாத் ஷிண்டே சிவசேனாவை உடைத்தது போல் தமிழ்நாட்டில் அதிமுகவை உடைத்து விட்டு பாஜகவுடன் இணைந்து பதவி வாங்க நினைக்கிறார்கள்.
இதில் எஸ்.பி வேலுமணியுடன் ராஜேந்திர பாலாஜியும் இருப்பதாக அரசியல் வட்டாரத்தில் பேசபடுவதாக தகவல்கள் வருகிறது. இதைப் பற்றி அவர் முதலில் தெளிவுபடுத்த வேண்டும்.
`தமிழகத்தில் பாஜக..'
விஜய்க்கு ஓபிஎஸ் ஆதரவு தெரிவித்துள்ளார் இதனால் தமிழகத்தில் மூன்றாவது அணி உருவாவதற்கான வாய்ப்புகள் இருக்கிறதா? என்ற கேள்விக்கு,
“ஓ.பன்னீர் செல்வம், பாரத பிரதமர் மோடி சொல்வதை தான் இதுவரை செய்திருக்கிறார் அவர் நிதியமைச்சர் பதவியை பெறும் போதும் ஒருங்கிணைப்பாளர் பொறுப்பை பெறும் போதும் பிரதமர் மோடி சொல்வதை தான் கேட்டிருக்கிறார்.

பாஜகவை பொருத்தமட்டில் அமித்ஷா தொடங்கி எல்லோருமே குழப்பத்தை உருவாக்க நினைக்கிறார்கள். மீண்டும் மீண்டும் தமிழக வெற்றி கழகத்தை பற்றியும் அதன் தலைவர் விஜய் பற்றியும் தவெக எதிர்காலத்தில் கூட்டணி வைக்க இருப்பதாக பிரமையை ஏற்படுத்த முயற்சிக்கிறார்கள்.
பாஜகவை தவெக தலைவர் விஜய் கடுமையான வார்த்தைகளால் விமர்சித்த போதிலும் பாஜகவின் தலைவர்கள் அமித்ஷா மற்றும் நயினார் நாகேந்திரன் விஜயை விழுந்து விழுந்து கெஞ்சுகிறார்கள் என்பது புரியவில்லை. ஏனென்றால், பாஜக என்பது தமிழகத்திற்கு எதிரான கட்சி, தமிழர்களால் நிராகரிக்கப்பட்ட கட்சி. அதனால் பாஜக பொய்யும் புரட்டையும் பரப்பும் பணியை இயற்கையாக வைத்திருக்கிறார்கள்” என்றார்.