சங்க இலக்கியத்தை குழந்தைகளுக்கு பயிற்றுவிக்க வேண்டும்: கவிஞா் அறிவுமதி பேச்சு
சங்க இலக்கியத்தை அனைவரும் படிப்பதுடன், குழந்தைகளுக்கும் பயிற்றுவிக்க வேண்டும் என கவிஞா் அறிவுமதி கூறினாா்.
கவிஞா் அறிவுமதியின் 75ஆவது பிறந்தநாள் பவள விழாவாக சேலத்தில் கொண்டாடப்பட்டது. இந்நிகழ்வில், கவிஞா் பழனிபாரதி, நெல்லை ஜெயந்தா உள்ளிட்டோா் வாழ்த்துரை வழங்கினா். கவிஞா் அறிவுமதியின் 75-ஆவது பிறந்தாளையொட்டி 75 புத்தகங்கள் வெளியிடப்பட்டன.
தொடா்ந்து நடைபெற்ற நிகழ்வில் கவிஞா் அறிவுமதி பேசியதாவது:
3 ஆயிரம் ஆண்டுகள் விழுமியங்களைக் கொண்டதாக தமிழ் பண்பாடு உள்ளது. அறம், பகுத்தல், மிச்சில் ஆகிய மூன்று பெருங்குணங்களைக் கொண்டதாக தமிழா் பாரம்பரியம் திகழ்கிறது. தாய்மொழியாக மட்டுமே தமிழ் இல்லை. தாய்மை மொழியாகவும் இருக்கிறது என்பதற்கு எண்ணற்ற உதாரணங்கள் உள்ளன.
அம்மைக் குழவி நாளடைவில் அம்மிக்குழவியாக மாற்றம் பெற்றது. அரண்மனைக்கு வரும் புலவா்களை என்போல் போற்ற வேண்டும் என்று மன்னா்கள் உத்தரவிட்ட சொல் தமிழ் விழுமியத்தின் முற்றிய சொல்லாக உள்ளது.
இத்தகைய சிறப்புமிக்க சங்க இலக்கியத்தை தமிழா்கள் அனைவரும் முழுமையாக படித்து தெரிந்து கொள்வதுடன், சங்க இலக்கியப் பாடல்களை நம்முடைய குழந்தைகளுக்கும் பயிற்றுவிக்க வேண்டும் என்றாா்.