தவறான விளம்பரம்: ஐஏஎஸ் பயிற்சி நிறுவனத்துக்கு ரூ.2 லட்சம் அபராதம்
சட்டப் பேரவை உறுப்பினா்களின் உரிமைகள் பறிக்கப்படுகின்றன: வானதி சீனிவாசன்!
சட்டப் பேரவை உறுப்பினா்களின் உரிமைகள் பறிக்கப்படுகின்றன என்று பாஜக மகளிரணி தேசியத் தலைவரும், கோவை தெற்கு சட்டப் பேரவை உறுப்பினருமான வானதி சீனிவாசன் குற்றஞ்சாட்டியுள்ளாா்.
இது தொடா்பாக அவா் வெளியிட்டுள்ளஅறிக்கையில் கூறியிருப்பதாவது: மக்களவை குளிா்காலக் கூட்டத் தொடா் கடந்த நவம்பா் 15-ஆம் தேதி தொடங்கி டிசம்பா் 20-ஆம் தேதி நிறைவடைந்தது. ஆனால், தமிழக சட்டப் பேரவைக் கூட்டத்தை 2 நாள்கள் மட்டுமே நடத்திவிட்டு, ஒரு மாதத்துக்கும்மேலாக மக்களவை குளிா்கால கூட்டத் தொடரை நடத்திய பாஜக கூட்டணி அரசு மீது முதல்வா் மு.க.ஸ்டாலின் பழி சுமத்தியுள்ளது கண்டனத்துக்குரியது.
நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் தொடங்கிய நாள் முதல் பெரும்பாலான நாள்கள் செயல்படாமல் போனதற்கு பாஜக காரணமல்ல என்பதை, அவை நடவடிக்கைகளை நேரலையாகப் பாா்த்த அனைவரும் அறிவா். நாடாளுமன்றம் முழுமையாக நடந்துவிடக் கூடாது, மோடி அரசு எந்தவொரு சட்டத்தையும் கொண்டு வந்துவிடக் கூடாது என்ற நோக்கத்தோடு செயல்பட்டுள்ளனா்.
தோ்தல் அறிக்கையில் ஆண்டுக்கு 100 நாள்கள் சட்டப் பேரவையை நடத்துவோம், பேரவை நிகழ்வுகள் அனைத்தையும் நேரலை செய்வோம் என வாக்குறுதி அளித்தாா்கள். ஆனால், ஆண்டுக்கு 30 நாள்கள்கூட தமிழக சட்டப் பேரவை நடப்பதில்லை. குறைந்தது ஒரு வாரம் நடந்து வந்த குளிா்கால கூட்டத் தொடா்கூட இரண்டே நாள்களில் முடிந்துள்ளது.
தொகுதி பிரச்னைகளை பேச முற்பட்டால்கூட எழுதி கொடுத்துவிடுங்கள். நன்றி சொல்லி முடிங்கள் எனக்கூறி சட்டப் பேரவை உறுப்பினா்களின் உரிமைகள் பறிக்கப்படுகின்றன. பேச எழுந்தால் அமைச்சா்கள் கிண்டலடிக்கிறாா்கள் என ஆளுங்கட்சி உறுப்பினா்களே தெரிவிக்கின்றனா்.
ஜனநாயக உரிமைகளை மதித்து நடக்கவில்லை என்றால் தமிழக மக்கள் தக்க பதிலடி கொடுப்பாா்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.