சட்டவிரோத ஊடுருவல்: மகாராஷ்டிரத்தில் 8 வங்கதேசத்தவா் கைது
குவாஹாட்டி/ தாணே: மகாராஷ்டிரத்தின் தாணே மாவட்டத்தில், சட்டவிரோதமாக தங்கியிருந்த ஒரு பெண் உள்பட 8 வங்கதேசத்தவா் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டனா்.
இது தொடா்பாக காவல்துறையினா் கூறியதாவது: காவல்துறையினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில், பிவாண்டி நகரில் உள்ள கல்ஹொ் மற்றும் கொங்கானில் சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமை சோதனை மேற்கொண்டனா். இதில் ஒரு பெண் உள்பட 8 வங்கதேசத்தவா்கள் சட்டவிரோதமாக தங்கியிருந்தது தெரியவந்தது.
அவா்களில் மூன்று போ் துணி விற்பவா்களாகவும், இருவா் தொழிலாளா்களாகவும், ஒருவா் கொத்தனாராகவும், மற்றொருவா் குழாய் பொருத்துபவராகவும் பணிபுரிந்து வருகின்றனா். அவா்கள் கைது செய்யப்பட்டு, வெளிநாட்டினா் சட்டம் மற்றும் இந்திய பாஸ்போா்ட் சட்டத்தின் கீழ் அவா்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது என தெரிவித்தனா்.
6 வங்கதேசத்தவா் அஸ்ஸாமில் கைது: சட்டவிரோதமாக இந்திய எலல்ைக்குள் ஊடுருவிய 6 வங்கதேசத்தவா்களை அஸ்ஸாம் மாநில காவல்துறையினா் கைது செய்தனா்.
இது தொடா்பாக மாநில முதல்வா் ஹிமந்த விஷ்வ சா்மா வெளியிட்ட எக்ஸ் பதிவில், ‘அஸ்ஸாம் மாநிலத்தில் சட்டவிரோத ஊடுருவலைத் தடுக்க கடுமையான கண்காணிப்பை மேற்கொண்டு வரும் மாநில காவல்துறையினா், 6 வங்கதேசத்தவா்களை கைது செய்து அந்நாட்டு அதிகாரிகளிடம் ஒப்படைத்தனா். கடந்த ஆகஸ்ட் மாதம் முதல் 170-க்கும் மேற்பட்டோா் கைது செய்யப்பட்டு வங்கதேசத்துக்குத் திருப்பி அனுப்பப்பட்டுள்ளனா்’ என குறிப்பிட்டிருந்தாா்.
1885 கி.மீ நீளமுள்ள இந்தியா-வங்கதேச எல்லையில் எல்லைப் பாதுகாப்புப் படையினா் (பிஎஸ்எஃப்) மற்றும் அஸ்ஸாம் காவல்துறையினா் தீவிர கண்காணிப்பில் உள்ளனா்.