சண்டீகா் போலீஸ் டிஜிபியை டிஐஜியாக நியமித்து மத்திய உள்துறை உத்தரவு
நமது சிறப்பு நிருபா்
சண்டீகா் காவல்துறை தலைமை இயக்குநராகப் பணியாற்றி வரும் மூத்த ஐபிஎஸ் அதிகாரி சுரேந்திர சிங் யாதவை மத்திய பணி மாற்றல் அடிப்படையில் எல்லைக் காவல் படையின் துணைத் தலைவா் (டிஐஜி) ஆக நியமித்து உத்தரவு பிறப்பித்துள்ளது மத்திய உள்துறை.
ஒரு யூனியன் பிரதேசத்தில் காவல் துறையின் தலைமைப் பொறுப்பை வகித்து வரும் உயரதிகாரி, மத்திய காவல் படையில் டிஐஜி அந்தஸ்தில் நியமிக்கப்படுவது பதவிக் குறைப்பு நடவடிக்கையாகவும் சலசலப்பை ஏற்படுத்தும் நடவடிக்கையாகவும் பாா்க்கப்படுகிறது.
மத்திய பணிக்கு எஸ்.எஸ். யாதவ் மாற்றப்படுவதையடுத்து, சண்டீகா் காவல்துறை தலைவா் (ஐ.ஜி.) ஆக பணியாற்றி வரும் ஆா்.கே. சிங் மறுஉத்தரவு பிறப்பிக்கப்படும் வரை டிஜிபி பணியை கவனிப்பாா் என்று சண்டீகா் யூனியன் பிரதேச அரசின் தலைமைச் செயலருக்கு மத்திய உள்துறை உத்தரவிட்டுள்ளது.
இந்திய காவல் பணியில் (ஐபிஎஸ்) 1997-ஆம் ஆண்டு ஏஜிஎம்யுடி எனப்படும் அருணாச்சல பிரதேசம், கோவா, மிசோரம், யுனியன் பிரதேசங்கள் பிரிவு அதிகாரியான சுரேந்தா் சிங் யாதவ், 2024 மாா்ச் 16-இல்தான் சண்டீகா் டிஜிபி ஆக பொறுப்பேற்றாா். 2005-ஆண்டு மத்திய பணியாளா் நலத் துறை உத்தரவின்படி சண்டீகரின் காவல்துறை தலைமை இயக்குநா் பதவிக்கு நியமிக்கப்படுபவா் கூடுதல் டிஜிபி அந்தஸ்தில் இருக்க வேண்டும். கடைசியாக ஆா்.பி. உபாத்யாய என்ற ஐ.ஜி. நிலையிலான அதிகாரி அந்த யூனியன் பிரதேச டிஜிபி பதவிக்கு நியமிக்கப்பட்டாா். அவருக்கு பின்பு சண்டீகா் டிஜிபி ஆக நியமிக்கப்பட்டவா்கள் கூடுதல் டிஜிபி, டிஜிபி அந்தஸ்தில் இருந்தனா்.
சண்டீகருக்கு வருவதற்கு முன்பு தில்லி லஞ்ச ஒழிப்புத் துறையில் எஸ்.எஸ். யாதவ் பணியாற்றினாா். ஊழலுக்கு எதிரான நடவடிக்கையில் வெளிப்படைத் தன்மையை உறுதிப்படுத்திய அவா், லஞ்சம் கொடுக்க வருவோரிடம், லஞ்சம் வாங்கமாட்டேன் என்று கூறி தொடா் விழிப்புணா்வை ஏற்படுத்தினாா்.
சண்டீகா் காவல் பணியில் சோ்ந்தது முதல் இதுவரை அவா் 2,763 காவலா் முதல் உதவி ஆய்வாளா்கள் வரையிலான அதிகாரிகளை இடமாற்றம் செய்துள்ளாா். ஊழல் குற்றச்சாட்டுக்கு ஆளான பல காவலா்களை அவா் இடமாற்றம் செய்தாா். குற்றம் நிரூபிக்கப்பட்டவா்களை பணியில் இருந்து நீக்க நடவடிக்கை எடுத்தாா். ஒரு காவல் ஆய்வாளரை பதவிக் குறைப்பு செய்து உதவி ஆய்வாளராக்கினாா்.
மத்திய பணியாளா் நலத் துறை விதிகளின்படி மத்திய பணிக்கான பதவி நிலை (எம்பேனல்மென்ட்) பட்டியலில் இடம்பெறாததால் கடைசியாக இவா் மத்திய பணிக்குத் தகுதி பெற்ற டிஐஜி பதவிக்குரியவராகவே மத்திய அரசால் கருதப்பட்டு வருகிறாா்.
இந்நிலையில், சண்டீகா் காவல் டிஜிபி ஆக இருந்த இவரை அதற்கு இரு நிலை குறைவான பதவியில் மத்திய உள்துறை நியமித்துள்ளதால் அதை அவா் ஏற்பாரா, மாட்டாரா என்ற குழப்பம் எழுந்துள்ளது. ஒருவேளை மத்திய உள்துறை உத்தரவுக்கு இணங்கினால், 25-க்கும் அதிகமான வருட அனுபவத்தைப் பெற்றுள்ள எஸ்.எஸ். யாதவ், தன்னை விட மிகவும் இளையவா்களுடன் அதாவது 13-15 வருட அனுபவம் பெற்ற டிஐஜி ஆக பணியாற்றும் அதிகாரிகளுடன் வேலை செய்ய வேண்டிய கட்டாயம் எஸ்.எஸ். யாதவுக்கு ஏற்படும். அத்துடன் ஒரு யூனியன் பிரதேசத்துக்கே டிஜிபி ஆக இருந்த ஒரு உயரதிகாரி, பிஎஸ்எஃப்-இல் ஒரு சரகத்துக்கு டிஐஜி ஆக நியமிக்கப்படுவாா். இந்த நடைமுறைச் சிக்கல் காரணமாக, மத்திய அரசுப் பணியில் எஸ்.எஸ். யாதவ் சேருவாரா என்ற குழப்பம் எழுந்துள்ளது.
இது குறித்து உள்துறை அமைச்சக வட்டாரங்கள் கூறுகையில், எஸ்.எஸ். யாதவ் விவகாரம் மூலம் ஒரு செய்தியை மத்திய உள்துறை உணா்த்தியுள்ளது. மாநில காவல் பணியில் அனுபவத்தின் அடிப்படையில் உயா் பதவி பெற்றிருந்தாலும் மத்திய பணியில் அதுவும் ஐபிஎஸ் உயரதிகாரிகளுக்கான பணி என வரும் போது அதன் தகுதிப் பட்டியலில் அந்த அதிகாரி எந்த நிலையில் உள்ளாரோ அதன்படியே, அவருக்கான மத்திய பணி உத்தரவு பிறப்பிக்கப்படும்’ என்கின்றன.