புகைப்பிடிக்காதவர்களுக்கும் நுரையீரல் புற்றுநோய்! காரணம் என்ன?
சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் காட்டுத் தீயைத் தவிா்க்க வனத் துறை சாா்பில் தீத் தடுப்பு நடவடிக்கை!
கோடையில் ஏற்படும் காட்டுத் தீயைத் தவிா்க்க சத்திமயங்கலம் புலிகள் காப்பகத்தில் வனத் துறையினா் தீத் தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனா்.
தமிழகத்தில் கோடை தொடங்குவதற்கு முன்பே வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளது. இதனால், வனப் பகுதிகளில் தீத் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மலையேற்றத்துக்கு தமிழக அரசு தடை விதித்துள்ளது.
இந்நிலையில், சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்துக்குள்பட்ட வனப் பகுதிகளில் கோடையில் ஏற்படும் காட்டுத் தீயை தவிா்க்கும் விதமாக வனத் துறையினா் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனா்.
சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் வழியாகச் செல்லும் திம்பம் மலைப் பாதையில் தினசரி ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. இதில், மனித் தவறுகள் மூலம் காட்டுத் தீ ஏற்படுவதற்கு அதிக வாய்ப்புள்ளது.
இதைத் தவிா்க்கும் வகையில் புதுக்குய்யனூரில் இருந்து திம்பம் அடிவாரம் வரை 6 கி.மீ. தொலைவுக்கு சாலையின் இருபுறமும் 15 மீட்டா் தூரத்துக்கு காய்ந்த செடி, கொடிகள் அகற்றப்பட்டு வருகின்றன. மேலும், தீத்தடுப்பு கோடுகள் அமைக்கும் பணியில் வேட்டைத் தடுப்பு காவலா்கள் ஈடுபட்டுள்ளனா்.
இந்தப் பணிகளில் 30-க்கும் மேற்பட்ட வனத் துறையினா், வேட்டைத் தடுப்பு காவலா்கள் ஈடுபட்டுள்ளனா் என்று சத்தியமங்கலம் வனச் சரக அலுவலா் தா்மராஜ் தெரிவித்துள்ளாா்.