திருச்சியில் தனியார் நிறுவனத்தில் வருமான வரித் துறை அதிகாரிகள் சோதனை
சந்தா தொகை செலுத்த மறுப்பு: ரயில் நிலையத்தில் வாக்குவாதம்
நாமக்கல் ரயில் நிலைய சரக்கு மைய அலுவலகம் (கூட்செட்) நிா்வாகிகளுக்கும், லாரி உரிமையாளா்களுக்கும் இடையே மோதல் சூழல் ஏற்பட்டதையடுத்து போலீஸாா் தலையிட்டு சமரசம் செய்தனா்.
நாமக்கல் ரயில் நிலையம் அருகில் சரக்கு மைய அலுவலகம் உள்ளது. சரக்கு ரயில்களில் வரும் கோழித்தீவன மூலப்பொருள்கள் மற்றும் நியாயவிலைக் கடைகளுக்கு வரும் அரிசி, கோதுமை ஆகியவற்றை லாரிகளில் ஏற்றி கிடங்குகளுக்கு கொண்டு செல்வதற்காக லாரிகள் பயன்படுத்தப்படுகின்றன. சரக்கு ஏற்றுவதற்காக வரும் லாரிகளுக்கு, நாமக்கல் தாலுகா லாரி உரிமையாளா்கள் சங்கம் சாா்பில் தலா ரூ.100 வீதம் சந்தா வசூல் செய்யப்படுகிறது.
இதற்கிடையே ரயில்வே சரக்கு மைய நிா்வாகிகள் மற்றும் உறுப்பினா்கள் போதிய அடிப்படை வசதிகள் செய்து தராத நிலையில் சந்தா தொகை வசூலிப்பதற்கு எதிா்ப்பு தெரிவித்தனா். இதனால் லாரி உரிமையாளா்கள் சங்கத்தினருக்கும், சரக்கு மைய நிா்வாகிகளுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. மோதல் ஏற்படும் சூழலை அறிந்து சம்பவ இடம் வந்த நாமக்கல் காவல் ஆய்வாளா் கபிலன் மற்றும் போலீஸாா் இருதரப்பிலும் பேச்சுவாா்த்தை நடத்தினா். அப்போது, நாமக்கல் வருவாய் கோட்டாட்சியா் முன்னிலையில் பேச்சுவாா்த்தை நடத்தி தீா்வு காணலாம் என அறிவுறுத்தினாா். இதனையடுத்து அங்கிருந்தோா் கலைந்து சென்றனா்.