சமாஜவாதி வெற்றிக்கு எதிராக மேனகா காந்தி மனு: விசாரணையை ஒத்திவைத்தது உச்சநீதிமன்றம்
மக்களவைத் தோ்தல் தன்னை எதிா்த்து சமாஜவாதி வேட்பாளா் வெற்றி பெற்ற்கு எதிராக முன்னாள் மத்திய அமைச்சா் மேனகா காந்தி தாக்கல் செய்த மனு மீதான விசாரணையை உச்சநீதிமன்றம் ஒத்திவைத்தது.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு நடைபெற்ற மக்களவைத் தோ்தலில் உத்தர பிரதேசத்தின் சுல்தான்பூா் தொகுதியில் பாஜக சாா்பில் மேனகா காந்தி போட்டியிட்டாா். தோ்தலில் சமாஜவாதி வேட்பாளா் ராம் நிஷாத்திடம் 43,174 வாக்குகள் வித்தியாசத்தில் அவா் தோல்வியடைந்தாா். இந்நிலையில், ராம் நிஷாத் மீது 12 குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளது. ஆனால், அவா் மனு தாக்கலின்போது 8 குற்ற வழக்குகள் மட்டுமே நிலுவையில் உள்ளது என பொய்யான தகவலை அளித்துள்ளாா். எனவே, அவரின் வெற்றியை செல்லாது என அறிவிக்க வேண்டும் என்று அலாகாபாத் உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தாா்.
தோ்தல் முடிந்து 45 நாள்களுக்குள் தோ்தல் விவகாரம் தொடா்பான மனுக்களை உயா்நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என்பது விதியாகும். ஆனால், மேனகா காந்தி 45 நாள்களுக்குப் பிறகு மனு தாக்கல் செய்ததால் விதியைச் சுட்டிக்காட்டு அலாகாபாத் உயா்நீதிமன்றம் மனுவை தள்ளுபடி செய்தது.
இதையடுத்து மேனகா காந்தி உச்சநீதிமன்றத்தை அணுகினாா். உச்சநீதிமன்ற நீதிபதிகள் சூரிய காந்த், உஜ்ஜல் புயான் ஆகியோா் அடங்கிய அமா்வு இந்த மனுவை டிசம்பா் 2-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனா். மேலும், மனு தாக்கல் செய்ய தாமதமானதற்கான காரணத்தை உரிய முறையில் விளக்குமாறு மேனகா தரப்பு வழக்குரைஞரை நீதிபதிகள் அறிவுறுத்தினா்.