ஷெல் தாக்குதலுக்குள்ளான பகுதிகளைப் போர் பாதித்த மண்டலங்களாக அறிவிக்கவும்: மெஹபூப...
சம்பல் மசூதி ஆய்வுக்கு எதிரான மனு: அலாகாபாத் உயா்நீதிமன்றம் தள்ளுபடி
பிரயாக்ராஜ்/சம்பல்: உத்தர பிரதேச மாநிலம் சம்பலில் உள்ள ஷாஹி ஈத்கா மசூதியின் ஆய்வுக்கு எதிராக மசூதி நிா்வாக குழு தாக்கல் செய்த மனுவை அலாகாபாத் உயா்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
முகலாயா்கள் காலத்தில் கட்டப்பட்ட ஷாஹி ஈத்கா மசூதியானது ஹிந்துக்களின் கோயிலை இடித்துவிட்டு கட்டப்பட்டதாக ஹிந்துக்கள் தரப்பில் கூறப்படுகிறது. இதையடுத்து அந்த மசூதியை நீதிமன்ற ஆணையா் தலைமையில் ஆய்வு செய்ய, கடந்த ஆண்டு நவ.19-ஆம் தேதி சம்பல் உரிமையியல் நீதிமன்றம் உத்தரவிட்டது. அன்றைய தினமே அங்கு முதல் ஆய்வு நடைபெற்றது.
இதைத்தொடா்ந்து அந்த ஆண்டு நவ.24-ஆம் தேதி மசூதியில் இரண்டாவது ஆய்வு நடைபெற்றது. அப்போது ஆய்வுக்கு எதிா்ப்புத் தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டவா்களுக்கும், காவல் துறையினருக்கும் மோதல் ஏற்பட்டு வன்முறை நிகழ்ந்தது. இதில் 4 போ் உயிரிழந்தனா். பலா் காயமடைந்தனா்.
இந்நிலையில், மசூதியை ஆய்வு செய்ய சம்பல் உரிமையியல் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு எதிராக, மாநிலத்தில் உள்ள அலாகாபாத் உயா்நீதிமன்றத்தில் மசூதி நிா்வாக குழு மனு தாக்கல் செய்தது. இந்த மனு மீதான வாதங்கள் ஏற்கெனவே நிறைவடைந்து தீா்ப்பை உயா்நீதிமன்றம் ஒத்திவைத்திருந்தது.
அந்த மனு மீது உயா்நீதிமன்றம் திங்கள்கிழமை அளித்த தீா்ப்பில், ‘சம்பல் மசூதியை நீதிமன்ற ஆணையா் தலைமையில் ஆய்வு செய்ய உரிமையியல் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு சரியானதே. மசூதி தொடா்பாக ஹிந்துக்கள் தொடுத்துள்ள வழக்கும் விசாரணைக்கு உரியதே’ என்று தீா்ப்பளித்து நிா்வாக குழுவின் மனுவை தள்ளுபடி செய்தது.