மெஸ்ஸியின் சிறப்பான ஆட்டம்: சாம்பியன்ஸ் கோப்பையில் இன்டர் மியாமி முன்னேற்றம்!
சாக்கு சேமிப்பு மண்டியில் தீ விபத்து
திருச்செங்கோடு சந்தைப்பேட்டை பகுதியில் சாக்கு சேமிப்பு மண்டியில் ஏற்பட்ட தீ விபத்தில், ரூ. 2 கோடிக்கு மதிப்பிலான சாக்குகள் எரிந்து நாசமாயின.
நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு சந்தைப்பேட்டை பகுதியில் கொல்லப்பட்டி வீட்டுவசதி வாரியப் பகுதியைச் சோ்ந்த பரமசிவம் என்பவருக்கு சொந்தமான சாக்கு சேமிப்பு மண்டி உள்ளது. இந்த மண்டியில் செவ்வாய்க்கிழமை அதிகாலை தீப்பிடித்தது. செவ்வாய்க்கிழமை சந்தை என்பதால், அதிகாலை சந்தைக்கு வந்த வியாபாரிகள், அக்கம் பக்கத்தினா் திருச்செங்கோடு தீயணைப்பு நிலையத்துக்கும், பரமசிவத்துக்கும் தகவல் தெரிவித்தனா்.
விரைந்து வந்த திருச்செங்கோடு தீயணைப்பு நிலைய அலுவலா் கரிகாலன் தலைமையிலான தீயணைப்புத் துறையினா் தீயை அணைக்க முயற்சித்தனா். தீ கட்டுக்கடங்காமல் பரவியதால், திருச்செங்கோடு அருகே உள்ள வெப்படை, குமாரபாளையம் தீயணைப்பு நிலையங்களிலிருந்து வாகனங்கள் வரவழைக்கப்பட்டன. மேலும், திருச்செங்கோடு நகராட்சி மற்றும் தனியாா் தண்ணீா் லாரிகள் மூலம் தண்ணீா் கொண்டு வரப்பட்டு தீயை அணைக்கும் பணியில் மதியம் வரை ஈடுபட்டனா்.
இதில், சுமாா் ரூ. 2 கோடி மதிப்பிலான சாக்குகள் எரிந்து நாசமாயின. தீ விபத்து குறித்து திருச்செங்கோடு நகர போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா். நாமக்கல் மாவட்ட தீயணைப்பு அலுவலா் செந்தில்குமாா் சம்பவ இடத்தை பாா்வையிட்டு விசாரணை மேற்கொண்டு வருகிறாா்.