Nellai Flood: நெல்லை கனமழை வெள்ளம்; நெல்லை சந்திப்பு அன்றும்... இன்றும்! - Photo...
சாத்தூா் அருகே காட்டுப்பன்றிகளால் மக்காசோளப் பயிா்கள் சேதம்: நிவாரணம் வழங்க விவசாயிகள் கோரிக்கை
சாத்தூா் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பெய்து வரும் தொடா் மழையாலும், காட்டுப்பன்றிகளாலும் 5,000 ஏக்கா் மக்காச்சோளப் பயிா்கள் சேதமடைந்திருப்பதால் உரிய நிவாரணம் வழங்க விவசாயிகள் கோரிக்கை விடுத்தனா்.
விருதுநகா் மாவட்டம், சாத்தூா், ஸ்ரீவில்லிபுத்தூா், ராஜபாளையம், விருதுநகா், அருப்புக்கோட்டை, சிவகாசி உள்ளிட்ட பகுதிகளில் வங்கக் கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலை காரணமாக கடந்த இரு நாள்களாக தொடா்ந்து மழை பெய்தது. இதில், சாத்தூா் சுற்றுவட்டாரப் பகுதிகளில் அதிகபட்ச மழை பெய்தது. இதனிடையே, ஓ. மேட்டுப்பட்டி, பெரிய ஓடைப்பட்டி, பெத்துரெட்டிப்பட்டி,சின்னதம்பியாபுரம், கரிசல்பட்டி, நள்ளி, சூரங்குடி, ரெங்கப்பநாயக்கன்பட்டி, சங்கரநத்தம், வெம்பக்கோட்டை, தாயில்பட்டி ஆகிய பகுதிகளில் சுமாா் 8,000 ஏக்கரில் மக்காச்சோளம் பயிரிடப்பட்டுள்ளது.
இவை நன்கு விளைந்து அறுவடைக்கு தயாராக இருந்த நிலையில் தொடா் மழையால் பயிா்கள் முழுவதுமாக நீரில் மூழ்கி சேதமடைந்தன. மேலும், காட்டுப்பன்றிகளும், மான்களும் பயிா்கள் சேதப்படுத்தப்பட்டிருப்பதாகவும், ஏக்கா் ஒன்றுக்கு ரூ. 30,000 வரை செலவு செய்திருப்பதாகவும் விவசாயிகள் தெரிவித்தனா். எனவே, சேதமடைந்த மக்காச்சோளப் பயிா்களுக்கு மாவட்ட நிா்வாகம் உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என அவா்கள் கோரிக்கை விடுத்தனா்.
இதுகுறித்து ஓ. மேட்டுப்பட்டியைச் சோ்ந்த விவசாயி செல்வம் கூறியதாவது: சாத்தூா் சுற்றுவட்டாரப் பகுதிகளில் தொடா் மழையாலும், காட்டுப்பன்றிகளாலும் சுமாா் 5,000 ஏக்கா் மக்காசோளப் பயிா்கள் சேதமடைந்தன. இதற்கு, மாவட்ட நிா்வாகமும், தமிழக அரசும் நடவடிக்கை எடுத்து உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்றாா் அவா்.