வைரல் விடியோ: காயப்பட்ட காட்டெருமையைத் தேடும் பணி தீவிரம்!
நீலகிரி: காலில் காயத்துடன் சுற்றித் திரியும் காட்டெருமையின் விடியோ வைரலானதைத் தொடர்ந்து, அந்தக் காட்டெருமைக்கு சிகிச்சை அளிப்பதற்காக வனத்துறையினர் அதனை தீவிரமாக தேடி வருகின்றனர்.
நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே கரும்பாலம்-சொகத்துரை சாலையில் வலது காலில் ரத்தக் காயத்தோடு காட்டெருமை ஒன்று சுற்றி வரும் விடியோ சமூக வலைத்தளத்தில் வைரலானது. இதனைத்தொடர்ந்து, அதை மீட்டு அதன் காயத்திற்கு சிகிச்சை அளிப்பதற்காக நீலகிரி வனத்துறையினர் தேடி வருகின்றனர்.
இதுகுறித்து குன்னூர் வனப்பகுதி அதிகாரி ரவீந்திரநாத் கூறுகையில், பத்து பேர் கொண்ட குழு ஒன்று அமைக்கப்பட்டு அந்தக் காட்டெருமையைத் தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருவதாகவும். தனது கூட்டத்தோடு சுற்றித் திரியும் அந்த வனவிலங்கு இது வரையில் கிடைக்காததினால் ஞாயிற்றுக்கிழமையான இன்றும் (டிச.15) அதைத் தேடும் பணித் தொடரும் என்றும் அவர் கூறினார்.
மேலும், அந்தக் காட்டெருமைக்கு ஏற்பட்டுள்ள காயம் குறித்து அவர் கூறுகையில், அந்தக் காட்டெருமை ஏதெனும் வேலியின் மீது கால் வைத்ததினாலோ அல்லது சாலையோரமாக ஏதேனும் கூர்மையான பொருட்கள் குத்தியதினாலோ இந்தக் காயம் ஏற்பட்டிருக்கக் கூடும் எனவும் இதற்கு மேல் அந்த விலங்கை கண்டுப்பிடித்தால் மட்டுமே தெளிவான தகவல்கள் கிடைக்கும் என்றும் அவர் கூறினார்.
இந்நிலையில், காயப்பட்ட காட்டெருமை கண்டுபிடிக்கப்பட்டவுடன் தெப்பக்காடு கால்நடை மருத்துவர் ராஜேஷ்குமார் தலைமையில் அதற்கு மயக்க ஊசி செலுத்தப்பட்டு, மருத்துவ சிகிச்சை அளிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.