Champions Trophy 2025: `ஐசிசி பாகிஸ்தானுக்கு லாலிபாப் கொடுக்கிறது' - முன்னாள் வீரர் PCBக்கு வார்னிங்
சாம்பியன்ஸ் டிராபி நடப்பு சாம்பியன் பாகிஸ்தான் தான் அடுத்தாண்டு சாம்பியன்ஸ் டிராபி தொடரை நடத்தவிருக்கிறது. வரும் பிப்ரவரி 16 தொடங்கி மார்ச் 9 வரையில் இது நடக்கும். இன்னும் 66 நாள்கள் தான் இருக்கிறது. ஆனாலும், ஐ.சி.சி தரப்பிலிருந்து இதுவரையில் போட்டி அட்டவணை வெளியிடப்படவில்லை. இதற்கு முக்கிய காரணம், பாதுகாப்பு காரணங்களைக் கூறி இந்திய அணியைப் பாகிஸ்தானுக்கு அனுப்ப மாட்டோம் என்று ஐ.சி.சி-யிடம், பி.சி.சி.ஐ ஒரே முடிவாக இருப்பதே.
பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் எவ்வளவோ உத்தரவாதம் அளித்தபோதும் பி.சி.சி.ஐ தனது முடிவில் உறுதியாக இருந்ததால், இந்திய அணியின் போட்டிகளை மட்டும் வேறு நாட்டில் நடத்தும் வகையில் ஹைபிரிட் மாடலில் சாம்பியன்ஸ் டிராபியை நடத்தும் ஆலோசனையில் ஐ.சி.சி ஈடுபட்டது. இவ்வாறான சூழலில்தான், சாம்பியன்ஸ் டிராபியை ஹைபிரிட் மாடல் முறையில் நடத்தும் முடிவுக்கு பாகிஸ்தான் கிரிக்கட் வாரியம் ஒப்புக்கொண்டதாகத் தகவல் வெளியாகிக் கொண்டிருக்கிறது.
மேலும், 2026-ல் இந்தியா இலங்கை இணைந்து நடத்தும் டி20 உலகக் கோப்பையில் லீக் மேட்சுகளில் பாகிஸ்தான் இந்தியாவில் விளையாடாது என்ற அந்நாட்டு கிரிக்கெட் வாரியத்தின் நிபந்தனையை ஐ.சி.சி ஏற்றுக்கொண்டதாகவும், அதோடு 2027-க்குப் பிறகு மகளிர் உலகக் கோப்பையை நடத்தும் உரிமையைத் தருவதாக ஐ.சி.சி உறுதியளித்திருப்பதாகவும் கூறப்படுகிறது. இவை குறித்து பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தரப்பிலிருந்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகலாம். அத்தகைய, அழுத்தில்தான் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் இருக்கிறது என்ற பேச்சுகளும் அடிபடுகிறது.
இந்த நிலையில், இதனால் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்துக்கு எந்தப் பயனும் இல்லை எனவும், இது ஐ.சி.சி கொடுக்கும் லாலிபாப் எனவும் பாகிஸ்தான் முன்னாள் வீரர் ஃபாசித் அலி விமர்சித்திருக்கிறார்.
இது குறித்து ஃபாசித் அலி தனது யூடியூப் சேனல் வீடியோவில், ``2027 அல்லது 2028-ல் பாகிஸ்தானுக்கு மகளிர் உலகக் கோப்பையை நடத்தும் உரிமை வழங்கப்படும் என்று கூறப்படுகிறது. இதனைப் பலரும், பாகிஸ்தானில் ஒன்றல்ல இரண்டு ஐ.சி.சி தொடர் என்று வரவேற்கிறார்கள். ஆனால், 2026-ல் பாகிஸ்தான் அணி இந்தியாவுக்குப் பயணம் செய்வதால், இந்திய பெண்கள் அணி பாகிஸ்தானுக்கு வருவதில் என்ன பயன்?
லாலிபாப் என்றால் என்ன தெரியுமா... அது இதுதான். பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்துக்கு ஐ.சி.சி கொடுக்கும் லாலிபாப் இது. இதனால் பாகிஸ்தானுக்கு எந்தப் பயனும் இல்லை. அதற்குப் பதிலாக, அடுத்தாண்டு நடைபெறும் ஆசிய கோப்பையை நடத்தக் கேளுங்கள். மகளிர் உலகக் கோப்பை அல்லது U-19 உலகக் கோப்பையை நடத்துவதன் மூலம் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் பயனடையாது. ஒருவேளை இந்த லாலிபாப்பை ஏற்றுக்கொண்டால் தோல்வியடைவீர்கள்." என்று கூறினார்.
சாம்பியன்ஸ் டிராபி விவாதங்களுக்கு மத்தியில்தான் ஐ.சி.சி தலைவராக இந்திய கிரிக்கெட் வாரியத்தின் முன்னாள் செயலாளர் ஜெய் ஷா சமீபத்தில் பதவியேற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
நீங்கள் விரும்பி படித்த தொடர்கள், இப்போது ஆடியோ வடிவில்... புத்தம் புதிய விகடன் ப்ளே... உங்கள் அன்றாட பணிகளை கவனித்துக் கொண்டே ரசித்து கேட்க, உடனே இன்ஸ்டால் செய்யுங்கள்...