வேட்டையனுக்குக் கள்ளிப்பால் கொடுத்தார்கள்: ஞானவேல்
திரைப்படங்கள் மீது செலுத்தப்படும் வன்முறை குறித்து இயக்குநர் ஞானவேல் கருத்து தெரிவித்துள்ளார்.
இயக்குநர் த.செ. ஞானவேல் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ள வேட்டையன் திரைப்படம் திரையரங்குகளில் கடந்த அக்.10 ஆம் தேதி வெளியானது.
கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும் உலகளவில் ரூ. 300 கோடிக்கும் அதிகமாக வசூலித்தது. ஆனாலும், படம் வெளியான சில நாள்கள் வரை கடுமையான விமர்சனங்களும் கிடைத்து.
இதையும் படிக்க: ரசிகர்களை உற்சாகப்படுத்திய அஜித்!
இந்த நிலையில், சினிமா எக்ஸ்பிரஸ் நேர்காணலில் பேசிய இயக்குநர் த. செ. ஞானவேல், “ ஒரு திரைப்படத்திற்கான நியாயமான விமர்சனங்கள் குறைந்துள்ளன. படம் வெளியாகும்போதே அது எப்படி இருக்கிறது என பலரும் சமூக வலைதளங்களில் பார்க்கின்றனர். வேட்டையன் மோசமான படம் என முதல் நாளில் சொல்ல ஆரம்பித்துவிட்டனர். இதைப் பார்த்தவர்களுக்கு ஒரு மனநிலை உருவாக்கியிருக்கும். அவர்களுடைய பார்வையை மாற்றும் சக்தி இங்கு இருக்காது.
விமர்சனங்கள் செய்பவர்களுக்கு ஒருவரைப் பிடிக்கவில்லை என்றாலும் நோக்கத்துடன் அதைத் தாக்க ஆரம்பிக்கின்றனர். அப்படி, வேட்டையனுக்குக் கள்ளிப்பால் கொடுத்தனர். நீங்கள் விரும்பாத ஒருவர் படத்தில் இருந்தால் குழு மனப்பான்மையில் அதை குறைகூற வேண்டும் என்கிற நோக்கில்தான் பெரும்பாலான விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன” எனத் தெரிவித்தார்.