Suriya 45: `12 வருட இடைவெளிக்குப் பிறகு' - சூர்யா படத்தில் இணைந்த தேசிய விருது நடிகர்
சூர்யாவின் 45-வது படத்தின் படப்பிடிப்பு பரபரப்பாக நடந்துக் கொண்டிருக்கிறது.
ஆர்.ஜே. பாலாஜி இயக்கத்தில் உருவாகும் இத்திரைப்படத்திற்கு சாய் அபயங்கர் இசையமைக்கிறார். த்ரிஷா இப்படத்தில் கதாநாயகியாக நடிக்கிறார். த்ரிஷா திரை துறைக்கு வந்து 22 ஆண்டுகள் ஆனதையொட்டி `சூர்யா 45' படக்குழு அதனை கொண்டாடி படத்தில் நடிப்பதை அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.
தற்போது படத்தில் இரண்டு மலையாளப் பிரபலங்கள் இணைந்திருக்கிறார்கள். மலையாள நடிகர் இந்திரன்ஸும் `லப்பர் பந்து' சுவாசிகாவும் படத்தில் இணைந்திருப்பதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியிட்டிருக்கிறது. மலையாள திரைப்படங்களில் பல காமெடி கதாபாத்திரங்களில் நடித்து கவனம் ஈர்த்தவர் இந்திரன்ஸ். கடந்த 2021-ம் ஆண்டு வெளியான `ஹோம்' திரைப்படத்திற்காக இவருக்கு தேசிய விருதும் கிடைத்திருந்தது. இவர் கடைசியாக தமிழில் `நண்பன்' படத்தில் நடித்திருந்தார். தற்போது 12 வருட இடைவெளிக்குப் பிறகு தமிழ் சினிமா பக்கம் வந்திருக்கிறார். நடிகை சுவாசிகாவும் படத்தில் இணைந்திருக்கிறார்.
சமீபத்தில் வெளியான `லப்பர் பந்து' திரைப்படம் இவருக்கு நல்ல வரவேற்பைப் பெற்றுக் கொடுத்தது. அதுமட்டுமல்ல, இவர் நடித்திருந்த அசோதை கதாபாத்திரம் பலராலும் கொண்டாடப்பட்டது. தமிழ் சினிமாவிலும் அறிமுகமாகி அடுத்தடுத்து பல மலையாளப் படங்களில் நடித்து தன்னை அடையாளப்படுத்திக் கொண்டவருக்கு `லப்பர் பந்து' திரைப்படம் தமிழில் இரண்டாவது இன்னிங்ஸைத் தொடங்கி வைத்திருக்கிறது.
நீங்கள் விரும்பி படித்த தொடர்கள், இப்போது ஆடியோ வடிவில்... புத்தம் புதிய விகடன் ப்ளே... உங்கள் அன்றாட பணிகளை கவனித்துக் கொண்டே ரசித்து கேட்க, உடனே இன்ஸ்டால் செய்யுங்கள்...