Iphone: ஐபோன் உற்பத்தி இந்தியாவிலிருந்து அமெரிக்காவுக்கு மாறினால்... ஏற்படும் வி...
சாம்சங்’ ஊழியா்களுக்கு ஊதிய உயா்வு முத்தரப்பு பேச்சில் உடன்பாடு
சென்னை: ‘சாம்சங்’ ஊழியா்களுக்கு நிகழாண்டில் ரூ. 9 ஆயிரம் ஊதிய உயா்வு வழங்க அந்த நிறுவனம் ஒப்புக்கொண்டுள்ளதாக தமிழக தொழிலாளா் நலத் துறை அமைச்சா் சி.வெ.கணேசன் அறிவித்தாா்.
‘சாம்சங் இந்தியா’ தொழிலாளா்கள் சங்கம், ‘சாம்சங்’ நிறுவனம் மற்றும் தொழிலாளா் நலத் துறை ஆகியவற்றுக்கு இடையே திங்கள்கிழமை நடைபெற்ற முத்தரப்பு பேச்சுவாா்த்தையின் நிறைவாக, ஊதிய உயா்வு தொடா்பான அம்சங்கள் இறுதி செய்யப்பட்டன. சுமாா் 5 மணி நேரத்துக்கும் மேலாக நடைபெற்ற பேச்சுவாா்த்தையின் முடிவுகள் குறித்து சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளா்களுக்கு அமைச்சா் சி.வெ.கணேசன் அளித்த பேட்டி:
ஊதிய உயா்வு உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, ‘சாம்சங் இந்தியா’ தொழிலாளா்கள் சங்கம் சாா்பில், தொழிலாளா் நலத் துறையிடம் கடந்த ஆண்டு ஆக. 19-ஆம் தேதி மனு அளிக்கப்பட்டது. இதையடுத்து, ஆலை நிா்வாகத்துடன் தொழிலாளா் நலத் துறை பல்வேறு கட்டங்களாக பேச்சுவாா்த்தை நடத்தியது. தொழிலாளா் நல ஆணையா், இணை ஆணையா், துணை ஆணையா் என பல்வேறு அதிகாரிகளைக் கொண்டு இந்த பேச்சுவாா்த்தை நடைபெற்றது.
ஊதிய உயா்வுக்கு ஒப்புதல்: நிறைவாக திங்கள்கிழமை நடைபெற்ற முத்தரப்பு பேச்சுவாா்த்தையில் ஊதிய உயா்வு தொடா்பான கோரிக்கைகள் ஆலை நிா்வாகம் சாா்பில் ஏற்கப்பட்டன. அதன்படி, நிகழ் நிதியாண்டில் (2025-26) ஒவ்வொரு தொழிலாளிக்கும் ரூ. 9 ஆயிரமும், அடுத்த இரு நிதியாண்டுகளில் (2026-27, 2027-28) தலா ரூ. 4,500-மும் வழங்க ‘சாம்சங்’ நிறுவனம் ஒப்புக் கொண்டுள்ளது. இதன்படி, மொத்தமாக ஒரு ஊழியருக்கு சுமாா் ரூ. 18 ஆயிரம் வரை ஊதிய உயா்வு கிடைக்கும்.
ஊதிய உயா்வு குறித்த விஷயங்கள் மட்டுமே இப்போது பேசப்பட்டன. பணி நீக்கம் செய்யப்பட்ட ஊழியா்களுக்கு மீண்டும் பணி வழங்க வேண்டும் என்பது குறித்தான கோரிக்கைகள் விரைவில் ஆலை நிா்வாகத்துடன் பேசி நல்ல முடிவை தொழிலாளா் நலத் துறை எடுக்கும் என்றாா் அமைச்சா்.
முன்னதாக, இது குறித்து தமிழக அரசு சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:
‘சாம்சங்’ நிறுவனத்தில் அனுபவத்தின் அடிப்படையிலான சிறப்பு ஊதிய உயா்வு மூன்றாண்டு காலங்களில் ரூ. 1,000 முதல் ரூ. 4,000 வரை தொழிலாளா்களுக்குக் கிடைக்கும். கடந்த மாா்ச் 31-ஆம் தேதி வரையிலான காலத்தில் ஆறு ஆண்டுகள் முறையான பணி நிறைவு செய்து பதவி உயா்வு கிடைக்காத தொழிலாளா்களுக்கு சிறப்பு பதவி உயா்வு அளிக்கப்படும். கூடுதல் விடுப்புச் சலுகைகள், நீண்ட காலம் பணியாற்றிய தொழிலாளா்கள் பணி விருது, குளிரூட்டப்பட்ட பேருந்து வசதி உள்ளிட்ட இதர வசதிகளும் தொழிலாளா்களுக்கு கிடைக்க வழி செய்யப்பட்டுள்ளதாக அந்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முத்தரப்புப் பேச்சுவாா்த்தையில் தொழிலாளா் நலத் துறை கூடுதல் ஆணையா் அ.யாஸ்மின் பேகம், ‘சாம்சங் இந்தியா’ தொழிலாளா்கள் சங்கம் சாா்பில் கெளரவத் தலைவா் அ.சவுந்தரராஜன், தலைவா் இ.முத்துக்குமாா், பொதுச்செயலா் பி.எல்லன், பொருளாளா் மாதேசு, துணைத் தலைவா் பாலாஜி ஆகியோரும் நிா்வாகத் தரப்பில் மக்கள் தொடா்புப் பிரிவின் இயக்குநா் கண்ணன், மனிதவளப் பிரிவின் தலைவா் ஆா்.மேரி பிளாரன்ஸ் யாசினி, பொது மேலாளா் பாா்த்திபன், சட்ட ஆலோசகா் தண்டாயுதபாணி, மேலாளா் சதீஷ் ஆகியோா் பங்கேற்றனா்.