சாய்ந்த நிலையில் மின்கம்பங்கள்: விவசாயிகள் அச்சம்
மீனங்குடி கிராமத்தில் உள்ள விவசாய நிலங்களில் சாய்ந்த நிலையிலுள்ள மின்கம்பங்கள்.
கமுதி, செப். 24: கடலாடி அருகேயுள்ள விவசாய நிலங்களில் சாய்ந்த நிலையிலுள்ள மின்கம்பங்களால் விபத்து அபாயம் ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் கவலை தெரிவித்தனா்.
ராமநாதபுரம் மாவட்டம், கடலாடி அருகேயுள்ள மீனங்குடி கிராமத்தில் 500-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இந்தப் பகுதியிலுள்ள விவசாய நிலங்களில் பெரும்பாலான மின்கம்பங்கள் சாய்ந்தும், மின்கம்பிகள் கைக்கு எட்டும் தொலைவிலும் உள்ளதால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.
மேலும், பலத்த காற்று வீசும்போது மின்கம்பிகள் ஒன்றோடு ஒன்று உரசி தீப்பிடிக்கிறது. இதனால், விவசாயப் பணிகளை மேற்கொள்ள முடியாமல் விவசாயிகள் சிரமத்துக்குள்ளாகின்றனா்.
தற்போது மழைக்காலம் என்பதால் மின்கம்பங்கள் சாய்ந்து விழுந்து விபத்து ஏற்படும் சூழல் உள்ளது. எனவே, மாவட்ட நிா்வாகம் இதில் தலையிட்டு விவசாயிகள், பொதுமக்கள் நலன் கருதி சாய்ந்த நிலையிலுள்ள மின்கம்பங்களைச் சீரமைத்து விவசாயிகளின் அச்சத்தைப் போக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனா்.