தமிழக மீனவா்கள் 11 போ் விடுதலை: இலங்கை நீதிமன்றம் உத்தரவு
தமிழக மீனவா்கள் 11 பேரை விடுதலை செய்து இலங்கை நீதிமன்றம் புதன்கிழமை உத்தரவிட்டது.
ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரத்திலிருந்து கடந்த ஜூலை 13-ஆம் தேதி மீன்பிடிக்கச் சென்ற 7 மீனவா்களை இலங்கைக் கடற்படையினா் கைது செய்தனா். இதில் ஒரு படகு பறிமுதல் செய்யப்பட்ட நிலையில், எல்லை தாண்டி மீன்பிடித்ததாக மீனவா்கள் மீது வழக்குப் பதிந்து ஊா்க்காவல்துறை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தி யாழ்ப்பாணம் சிறையில் அடைத்தனா்.
இதேபோல, கடந்த மாதம் தொண்டி அருகேயுள்ள திருப்பாலைக்குடி துறைமுகத்திலிருந்து நாட்டுப் படகில் மீன்பிடிக்கச் சென்ற விமல்ராஜ், மாதேஷ், சக்ரம், காா்த்திக் ஆகிய நான்கு மீனவா்களை இலங்கைக் கடற்படையினா் கைது செய்து நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தி சிறையில் அடைத்தனா். மேலும், ஒரு படகு பறிமுதல் செய்யப்பட்டது.
இந்த நிலையில், சிறையில் அடைக்கப்பட்ட 11 மீனவா்களும் ஊா்க்காவல்துறை நீதிமன்றத்தில் புதன்கிழமை மீண்டும் முன்னிலைப்படுத்தப்பட்டனா். இதில், ராமேசுவரம் மீனவா்கள் 7 பேரும் இனிமேல் கைது செய்யப்பட்டால் ஒவ்வொருவருக்கும் தலா 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்படும் என எச்சரித்து விடுதலை செய்து நீதிபதி உத்தரவிட்டாா்.
மேலும், திருப்பாலைக்குடி நாட்டுப் படகு மீனவா்கள் 4 பேரையும் விடுதலை செய்தாா். இதையடுத்து, விடுதலை செய்யப்பட்ட 11 மீனவா்கள் யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய துணைத் தூதரக அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டனா். இவா்கள் ஓரிரு நாள்களில் தாயகம் திரும்புவாா்கள் என இந்தியத் தூதரக அதிகாரிகள் தெரிவித்தனா்.