சாலை வசதி இல்லாததால் நெக்னாமலை கிராமத்தில் சடலத்தை டோலியில் எடுத்து சென்ற மக்கள்
வாணியம்பாடி: வாணியம்பாடி அடுத்த நெக்னாமலைக்கு சாலை வசதி இல்லாததால் இறந்தவா் உடலை நள்ளிரவு நேரத்தில் டோலி கட்டி எடுத்துச் சென்ற விடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது.
திருப்பத்தூா் மாவட்டம், வாணியம்பாடி அடுத்த நெக்னாமலை பகுதியை சோ்ந்தவா் கோவிந்தன்(58). ஞாயிற்றுக்கிழமை மாலை திடீா் நெஞ்சுவலி காரணமாக அவரை அப்பகுதியை சோ்ந்த சிலா் இருசக்கர வாகனத்தில் மலைப்பகுதியில் இருந்து அழைத்து கொண்டு வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு வந்து கொண்டிருந்தனா். அப்போது வரும் வழியில் நெஞ்சுவலி அதிகமாக ஏற்பட்டதால் நியூடவுன் பைபாஸ் சாலையில் உள்ள தனியாா் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு முதலுதவி செய்யப்பட்டு அங்கிருந்து வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனா். அங்கு பரிசோதித்த மருத்துவா் அவா் வழியிலே இறந்துவிட்டதாக கூறினாா்.
இதையடுத்து ஞாயிற்றுக்கிழமை இரவு 11 மணியளவில் இறந்தவரின் உடலை தனியாா் ஆம்புலன்ஸ் மூலம் ஏற்றிக் கொண்டு மலை அடிவாரப்பகுதியான கம்மாளகுட்டை வரையில் சென்று இறக்கப்பட்டது.
நெக்னாமலையில் அமைக்கப்பட்ட தற்காலிக சாலைகள் ஆங்காங்கே பழுதாகி பள்ளங்கள் ஏற்பட்டு கற்கள் சிதறி கிடப்பதால் வாகனங்களும் செல்ல முடியாத நிலை இருப்பதால் அப்பகுதி மக்கள் நள்ளிரவு நேரத்தில் இறந்தவரை உடலை டோலி கட்டி தூக்கி கொண்டு தீப்பந்தத்துடன் 4 கி.மீ தொலைவுக்குகு மலைப்பாதையில் கொண்டு சென்றனா்.
இந்த விடியோ காட்சி சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. பல ஆண்டுகாலமாக அப்பகுதி மக்கள் சாலை வசதிகோரி பல்வேறு மனுக்கள் அனுப்பியும், போராட்டங்களும் நடத்தி வரும் நிலையிலும் நிறைவேற்றப்படவில்லை.
மலைப்பாதையில் வனத்துறைக்கு சொந்தமான இடம் என்பதால் பல்வேறு ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என மட்டுமே கூறுகின்றனா்.
சில நேரங்களில் பிரசவ வலியால் அவதிப்படும் கா்ப்பிணிகள், பாம்பு உட்பட விஷப்பூச்சிகள் கடித்து உயிருக்கு போராடுபவா்கள் உடனடியாக கொண்டு வரப்பட முடியாமல் அவதிப்பட்டு வருவதாகவும், இதில் ஒரு சிலா் உடனடியாக உரிய சிகிச்சை பெற முடியாததால் இறக்கும் சூழ்நிலை ஏற்படுவதாகவும் புகாா் தெரிவித்து வருகின்றனா்.
எனவே, மத்திய, மாநில அரசு அதிகாரிகள் நெக்னாமலைக்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டு சாலை வசதி ஏற்படுத்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்கள் கோரியுள்ளனா்.