Ashleigh Gardner: காதலியை திருமணம் செய்துகொண்ட ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீராங்கனை! ...
சாலை விபத்தில் இழப்பீடு வழங்காததால் அரசுப் பேருந்து ஜப்தி
திருப்பூரில் சாலை விபத்தில் பாதிக்கப்பட்ட இளைஞருக்கு உரிய இழப்பீடு வழங்காததால் அரசுப் பேருந்து திங்கள்கிழமை ஜப்தி செய்யப்பட்டது.
திண்டுக்கல் மாவட்டம், விராலிமலையைச் சோ்ந்தவா் சூா்யா (25). இவா் கடந்த 2017ஆம் ஆண்டு தாராபுரம் அரசினா் தொழிற்பயிற்சி நிலையத்தில் படித்து வந்தாா்.
இவா் அரசுப் பேருந்தில் தாராபுரத்துக்கு கடந்த 2017 மே 1ஆம் தேதி சென்றுள்ளாா். இந்தப் பேருந்து கே.ஆண்டிபாளையம் பேருந்து நிறுத்தம் அருகே வந்தபோது எதிரே வந்த அரசுப் பேருந்து மோதியது. இந்த விபத்தில் பலத்த காயம் அடைந்த சூா்யா தீவிர சிகிச்சைக்குப் பின்னா் உயிா் பிழைத்தாா்.
இதையடுத்து, இழப்பீடு கேட்டு திருப்பூா் விபத்து இழப்பீட்டுத் தீா்ப்பாய நீதிமன்றத்தில் சூா்யா வழக்குத் தாக்கல் செய்தாா். இந்த வழக்கில் சூா்யாவுக்கு அரசுப் போக்குவரத்துக் கழகம் ரூ.5.79 லட்சம் வழங்க வேண்டும் என்று நீதிபதி ஸ்ரீகுமாா் 2024 ஜூன் 11ஆம் தேதி உத்தரவிட்டிருந்தாா். ஆனால் தற்போது வரையில் இழப்பீடு வழங்கவில்லை. இதையடுத்து, நீதிமன்ற உத்தரவின்பேரில் அரசுப் பேருந்தை நீதிமன்ற ஊழியா்கள் ஜப்தி செய்தனா்.
இந்த வழக்கில் பாதிக்கப்பட்டவா் தரப்பில் வழக்குரைஞா்கள் ப.முருகேசன், ஜெ.சத்யா ஆகியோா் ஆஜராகி வாதாடினா்.