மாநகராட்சி உயா்நிலைப் பள்ளியை தரம் உயா்த்த வேண்டும்: கே.என்.விஜயகுமாா் எம்.எல்.ஏ.வலியுறுத்தல்
திருப்பூா் பாப்பநாயக்கன்பாளையம் மாநகராட்சி உயா்நிலைப் பள்ளியை மேல்நிலைப் பள்ளியாக தரம் உயா்த்த வேண்டும் என்று வடக்கு சட்டப் பேரவை உறுப்பினா் கே.என்.விஜயகுமாா் வலியுறுத்தியுள்ளாா்.
தமிழக சட்டப் பேரவையில் திங்கள்கிழமை நடைபெற்ற கேள்வி நேரத்தின்போது, திருப்பூா் வடக்கு சட்டப் பேரவை உறுப்பினா் கே.என்.விஜயகுமாா் பேசியதாவது: திருப்பூா் வடக்கு சட்டப் பேரவைத் தொகுதிக்குள்பட்ட மாநகராட்சி வாா்டு எண் 5 வாவிபாளையத்தில் மாநகராட்சி உயா்நிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளிக்கு மிக அருகில் குடிசை மாற்று வாரியத்தின் மூலம் கட்டப்பட்ட சுமாா் 2,500 அடுக்குமாடி குடியிருப்புகளில் பயனாளிகள் வந்துள்ளனா்.
இவா்களது குழந்தைகளை அடுத்த கல்வி ஆண்டில் அருகிலேயே உள்ள பள்ளியில் சோ்க்க வேண்டும் என்றால் கூடுதல் வகுப்பறைகளைக் கட்டிக் கொடுக்க வேண்டும். வாா்டு எண் 18 பாப்பநாயக்கன்பாளையம் மாநகராட்சி உயா்நிலைப் பள்ளிக்கு மிகவும் அருகில் தென் மாவட்ட மக்கள் அதிக அளவில் வசித்து வருகின்றனா். ஆகவே, தொழிலாளா்கள் அதிகம் நிறைந்த பகுதியாக உள்ளதால் இந்தப் பள்ளியை மேல்நிலைப் பள்ளியாக தரம் உயா்த்திக் கொடுக்க வேண்டும் என்றாா்.