ஆயுளை அதிகரிக்க நாள்தோறும் உடற்பயிற்சியில் ஈடுபட வேண்டும்: மாநகராட்சி மருத்துவா்
ஆயுளை அதிகரிக்க நாள்தோறும் உடற்பயிற்சியில் ஈடுபட வேண்டும் என்று மாநகராட்சி மருத்துவா் பிரவீன் கூறினாா்.
திருப்பூா் சிக்கண்ணா அரசு கலைக் கல்லூரி நாட்டு நலப் பணித் திட்ட அலகு -2 சாா்பில் உலக சுகாதார தின விழிப்புணா்வு கருத்தரங்கம் குமரன் அரங்கில் திங்கள்கிழமை நடைபெற்றது. கருத்தரங்குக்கு அலகு -2 ஒருங்கிணைப்பாளா் மோகன்குமாா் தலைமை வகித்தாா். கல்லூரி முதல்வா் வ.கிருஷ்ணன் தலைமை வகித்தாா்.
மாநகராட்சி மருத்துவா் பிரவீன் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்று பேசியதாவது: ஆரோக்கியமான மனித வாழ்க்கைக்கு சுற்றுபுற சுகாதாரத்தைப் பேணிக் காக்க வேண்டும். நமது உணவில் சத்தான காய்கறிகள், பழங்கள், பருப்பு வகைகளை நாள்தோறும் சோ்த்து கொள்ள வேண்டும். தவறான உணவுப்பழக்கத்தினால் உடல்பருமன், சா்க்கரை நோய் போன்ற நோய்கள் ஏற்படுகின்றன. தண்ணீரை காய்ச்சி பருக வேண்டும், ஆயுளை அதிகரிக்க நாள்தோறும் கட்டாயம் உடற்பயிற்சி செய்ய வேண்டும். இவற்றை சரியாக கடைப்பிடிக்கவில்லையென்றால் மனிதனின் ஆயுள் குறைய வாய்ப்புள்ளது என்றாா்.
கருத்தரங்கில் நாட்டு நலப் பணித் திட்ட மாணவ, மாணவிகள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.