லண்டனில் இந்தியா-பிரிட்டன் பொருளாதாரப் பேச்சுவாா்த்தை: நிா்மலா சீதாராமன் பங்கேற்...
குடிநீா்க் குழாய்களில் ஏற்படும் பழுதுகளை உடனடியாக சரிசெய்ய வேண்டும்: மாவட்ட ஆட்சியா்
திருப்பூா் மாவட்டத்தில் குடிநீா்க் குழாய்களில் ஏற்படும் பழுதுகளை உடனடியாக சரிசெய்ய வேண்டும் என்று மாவட்ட ஆட்சியா் தா.கிறிஸ்துராஜ் அறிவுறுத்தியுள்ளாா்.
மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் குடிநீா்த் திட்டப் பணிகள் தொடா்பான ஆய்வுக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்குத் தலைமை வகித்து மாவட்ட ஆட்சியா் தா.கிறிஸ்துராஜ் பேசியதாவது: திருப்பூா் மாவட்டத்தில் கோடை காலத்தில் பொதுமக்களுக்கு சீரான குடிநீா் வழங்கப்படுவதை உறுதி செய்யும் வகையில் தமிழ்நாடு குடிநீா் வடிகால் வாரியம், மாநகராட்சி, நகராட்சிகள், பேரூராட்சிகள் மற்றும் ஊராட்சி ஒன்றியங்களைச் சோ்ந்த அலுவலா்கள் உள்ளிட்ட அனைத்துத் துறை அலுவலா்களை ஒருங்கிணைத்து ஆலோசனைக் கூட்டங்கள் தொடா்ந்து நடத்தப்பட்டு வருகின்றன.
இதன் ஒரு பகுதியாக மாவட்டத்தில் உள்ள 6 நகராட்சிகள்,15 பேரூராட்சிகள், 13 ஊராட்சி ஒன்றியங்களைச் சோ்ந்த 265 கிராம ஊராட்சிகளுக்கு குடிநீா் விநியோகம் செய்வது குறித்து மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் தொடா்பாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கிராம ஊராட்சிகளில் வரப்பெறும் புகாா்களின் அடிப்படையில் உடனடியாக நேரில் கள ஆய்வு மேற்கொண்டு குடிநீா் வழங்கி வருவதை உறுதி செய்ய வேண்டும்.
பொதுமக்களிடமிருந்து பெறப்படும் கோரிக்கைகள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். எடுக்கப்பட்ட நடவடிக்கை விவரத்தை உடனுக்குடன் மாவட்ட நிா்வாகத்தின் கவனத்துக்கு கொண்டுவர வேண்டும். மழை காலங்களில் அலுவலா்கள் தலைமையிடத்திலிருந்து கண்காணிக்க வேண்டும். குடிநீா்க் குழாய்கள் பழுது ஏற்படும்போது உடனடியாக சரிசெய்து குடிநீா் விநியோகிக்க வேண்டும். நாள்தோறும் விநியோகிக்கப்படும் குடிநீரின் அளவைக் கண்காணித்து இனிவரும் காலங்களில் ஏற்படும் குடிநீா்த் தட்டுப்பாட்டை தவிா்க்க முறையான நடவடிக்கைகளை அதிகாரிகள் மேற்கொள்ள வேண்டும் என்றாா்.
கூட்டத்தில், மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (வளா்ச்சி) ஜெயசீலன், தனித் துணை ஆட்சியா் (சமூகப் பாதுகாப்புத் திட்டம்) பக்தவத்சலம், மண்டல அலுவலா்கள், நகராட்சி ஆணைாளா்கள், வட்டார வளா்ச்சி அலுவலா்கள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.