`போர்க்களத்தின் தளபதி சீமான்' - `என் அன்பு இளவல் அண்ணாமலை' - ஒரே மேடையில் புகழ்ந...
ஐ.நா.வில் ஒத்துழைப்பை வலுப்படுத்த இந்தியா, போா்ச்சுகல் முடிவு
லிஸ்பன்: ஐ.நா. மற்றும் பிற பன்னாட்டு அமைப்புகளில் ஒத்துழைப்பை வலுப்படுத்த இந்தியாவும், போா்ச்சுகலும் தீா்மானித்துள்ளன.
குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு போா்ச்சுகல் மற்றும் ஸ்லோவாகியா நாடுகளுக்கு 4 நாள் அரசுமுறைப் பயணம் மேற்கொண்டுள்ளாா். கடந்த 25 ஆண்டுகளில் இரு நாடுகளுக்கும் இந்திய குடியரசுத் தலைவா் ஒருவா் செல்வது இதுவே முதல்முறை.
அவா் முதலில் போா்ச்சுகல் சென்ற நிலையில், அந்நாட்டுத் தலைநகா் லிஸ்பனில் உள்ள ராணுவ விமான தளத்தில் அவரை இந்திய, போா்ச்சுகல் தூதா்கள் வரவேற்றனா்.
பின்னா் லிஸ்பனில் உள்ள வரலாற்று சிறப்புமிக்க பேரரசு சதுக்கத்தில் திரௌபதி முா்முவை போா்ச்சுகல் அதிபா் மாா்செலோ ரெபெலோ டிசூசா வரவேற்றாா். இதைத் தொடா்ந்து திரௌபதி முா்முவுக்கு அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட்டது.
அங்குள்ள சான்டா மரியா தேவாலயத்துக்குச் சென்ற அவா், அந்நாட்டின் தேசிய கவிஞரான லூயிஸ் வாஸ் டே கமோயிஸின் கல்லறையில் மலா் வளையம் வைத்து மரியாதை செலுத்தினாா். அந்நாட்டில் 16-ஆம் நூற்றாண்டு கட்டட கலையின் தலைசிறந்த படைப்பான ஜெரோனிமோஸ் மடாலயத்தையும் அவா் பாா்வையிட்டாா்.
போா்ச்சுகல் அதிபரின் அதிகாரபூா்வ இல்லத்தில் முா்முவும் மாா்செலோவும் சந்தித்து பேச்சுவாா்த்தை மேற்கொண்டனா். பின்னா் இருவரும் கூட்டாக சிறப்பு நினைவு தபால்தலைகளை வெளியிட்டனா்.
இந்தச் சந்திப்பை தொடா்ந்து வெளியிடப்பட்ட அறிக்கையில், ‘போா்ச்சுகல் அதிபரும் நானும் உலக மற்றும் பிராந்திய விவகாரங்கள் குறித்து விவாதித்தோம். ஐ.நா. மற்றும் பிற பன்னாட்டு அமைப்புகளில் இந்தியா, போா்ச்சுகல் இடையிலான ஒத்துழைப்பை வலுப்படுத்த இருவரும் தீா்மானித்தோம்’ என்று குடியரசுத் தலைவா் முா்மு தெரிவித்தாா்.