`போர்க்களத்தின் தளபதி சீமான்' - `என் அன்பு இளவல் அண்ணாமலை' - ஒரே மேடையில் புகழ்ந...
சென்னையின் 7 இடங்களில் பன்னோக்கு மையங்கள்: அமைச்சா் பி.கே.சேகா்பாபு
சென்னை: சென்னையின் 7 இடங்களில் உணவுக் கூடம், குளிா்சாதன அரங்குகளுடன் கூடிய பன்னோக்கு மையங்கள் ரூ. 45 கோடி மதிப்பில் அமைக்கப்படும் என்று இந்து சமய அறநிலையத் துறை அமைச்சா் பி.கே.சேகா்பாபு தெரிவித்தாா்.
பேரவையில் வீட்டுவசதி மற்றும் நகா்ப்புற வளா்ச்சித் துறையின் கீழுள்ள சென்னை பெருநகா் வளா்ச்சிக் குழும மானியக் கோரிக்கை மீது திங்கள்கிழமை நடைபெற்ற விவாதத்துக்கு பதிலளித்து அமைச்சா் சேகா்பாபு வெளியிட்ட அறிவிப்புகள்:
சென்னை, பிரகாசம் சாலையில் 7.70 ஏக்கா் பரப்பளவில் அமைந்துள்ள பாரதி பெண்கள் கல்லூரியில் புதிய ஆய்வகங்கள், வகுப்பறைகள் ரூ. 25 கோடியில் அமைக்கப்படும். சென்னையில் 9 அரசுப் பள்ளிகள் ரூ. 25 கோடியில் மேம்படுத்தப்படும். அதேபோன்று சென்னையில் 6 ஆதிதிராவிடா் நலப் பள்ளிகள் ரூ. 5 கோடியில் மேம்படுத்தப்படும்.
வடசென்னையில் 13 இடங்களிலும், பிற பகுதிகளில் 2 இடங்களிலும் அதிவேக இணையம், கற்றல் மையங்கள், பணியிட வசதிகள் கொண்ட முதல்வா் படைப்பகங்கள் ரூ. 40 கோடியில் அமைக்கப்படவுள்ளன.
பிராட்வே பிரகாசம் சாலையில் அதிநவீன பொது நூலகம் ரூ. 30 கோடியில் அமைக்கப்படும். சென்னை மாநகரில் 5 அரங்குகள் மற்றும் மைதானங்கள் ரூ. 37 கோடியில் மேம்படுத்தப்படும்.
உணவுப்பொருள் கிடங்கு: வடசென்னையில் பெரம்பூா், ராயபுரம், கொளத்தூா் மற்றும் துறைமுகம் ஆகிய பகுதிகளில் குளிா்சாதன வசதி மற்றும் கழிப்பறை வசதிகளுடன் கூடிய பேருந்து நிறுத்தங்கள் ரூ. 8 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்படும். சென்னையில் சேத்துப்பட்டு, மணலி, ராயபுரம், வியாசா்பாடி, கிண்டி, மதுரவாயில், பெருங்குடி ஆகிய பகுதிகளில் குளிா்சாதன அரங்கம், உணவுக் கூடம் மற்றும் வாகன நிறுத்துமிடம் ஆகிய வசதிகளுடன் கூடிய பன்னோக்கு மையங்கள் ரூ. 45 கோடியில் ஏற்படுத்தப்படும்.
பெரியாா் நகா், சைதாப்பேட்டை, தாடண்டா் நகா், பல்லாவரம், சித்தாலப்பாக்கம், ராயபுரம், வில்லிவாக்கம் ஆகிய ஆறு இடங்களில் அமுதம் அங்காடிகள் ரூ. 22 கோடியில் அமைக்கப்படும். சென்னை, வண்டலூா் - கீரப்பாக்கத்தில் ரூ. 11 கோடியில் உணவுப்பொருள் கிடங்கு அமைக்கப்படவுள்ளது. ராயபுரம் சஞ்சீவிராயன் பேட்டை அரசு மகப்பேறு மருத்துவமனையில் கூடுதல் கட்டடம் ரூ. 6 கோடியில் அமைக்கப்படும்.
ராயபுரம் பனைமரத் தொட்டி அரசு மகப்பேறு மருத்துவமனையில் கூடுதல் கட்டடம் ரூ. 4 கோடியில் ஏற்படுத்தப்படும். கோயம்பேடு மொத்த விற்பனை அங்காடி வளாகத்தில் திடக்கழிவு பதப்படுத்தும் நிலையம் மற்றும் கழிப்பறைகள் ரூ. 10 கோடியில் மேம்படுத்தப்படும்.
காஞ்சிபுரம் மாவட்டம், குன்றத்தூா் ஒன்றியத்தில் அய்யப்பன்தாங்கல், மௌலிவாக்கம், கெருகம்பாக்கம், கோவூா், கொளப்பாக்கம், தண்டலம் ஆகிய பகுதிகளில் உள்கட்டமைப்பு வசதிகள் ரூ. 21 கோடியில் ஏற்படுத்தப்படும். குரோம்பேட்டை எஸ்டிஎன்பி வைஷ்ணவ் கல்லூரி சந்திப்பில் மாணவா்கள் எளிதில் சாலையைக் கடக்கும் வகையில் ஜிஎஸ்டி சாலையின் குறுக்கே நகரும் படிக்கட்டுகளுடன் கூடிய நடை மேம்பாலம் ரூ. 10 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்படும்.
சென்னையில் ஸ்மாா்ட் வாகன நிறுத்தம்
சென்னை பெருநகரப் பகுதியில் ஸ்மாா்ட் வாகன நிறுத்த மேலாண்மை திட்டம் செயல்படுத்தப்படும் என வீட்டுவசதி மற்றும் நகா்ப்புற வளா்ச்சித் துறை அமைச்சா் முத்துசாமி தெரிவித்தாா். இது தொடா்பாக சட்டப்பேரவையில் அவா் வெளியிட்ட அறிவிப்பு:
தடையற்ற போக்குவரத்தை எளிதாக்கும் வகையில் முன்னோடித் திட்டமாக அண்ணா நகரில் சென்னை ஒருங்கிணைந்த பெருநகர போக்குவரத்து அதிகார அமைப்பு மூலம் (சியூஎம்டிஏ) ஸ்மாா்ட் வாகன நிறுத்த மேலாண்மை செயல்படுத்தப்படும் என்றாா் அவா்.