Kerala Ragging: அந்தரங்க உறுப்பில் தம்பிள்ஸை கட்டி தொங்கவிட்டு சித்திரவதை; கல்லூ...
சிசுவின் உடலைக் கடித்துத் தின்ற நாய்கள்: அரசு மருத்துவமனையில் அவலம்!
அரசு மருத்துவமனையில் பிறந்த பச்சிளங் குழந்தையின் உடலை நாய்கள் கடித்துக் குதறித் தின்றுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
உத்தரப் பிரதேசத்தின் லலித்பூரில் உள்ள மாவட்ட பெண்கள் மருத்துவமனையில், உடல் பாகங்கள் கடித்துக் குதறப்பட்ட நிலையில் ஒரு சிசுவின் உடலானது குப்பைகளுடன் குப்பையாகப் வீசிச் செல்லப்பட்டிருந்தது கண்டறியப்பட்டுள்ளது.
இதே மருத்துவமனையில் கடந்த 9-ஆம் தேதி பிரசவ வலி ஏற்பட்டதால் அனுமதிக்கப்பட்டிருந்த சங்கீதா என்ற கர்ப்பிணிக்கு அன்றைய நாளில் மாலை 7 மணியளவில் ஒரு குழந்தை பிறந்துள்ளது.
குறைப்பிரசவத்தில் பிறந்த இந்த குழந்தைக்கு மருத்துவ சிகிச்சை தேவைப்பட்டதைத் தொடர்ந்து, குழந்தைகள் சிறப்பு சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு அதன் உடல்நிலை தீவிரமாகக் கண்காணிக்கப்பட்டு வந்தது. எனினும், சிகிச்சை பலனின்றி அந்த குழந்தை பிறந்த 45 நிமிடங்களிலேயே உயிரிழந்தது.
இதனைத்தொடர்ந்து, பெற்றொரிடம் குழந்தையின் உடல் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், குப்பைத்தொட்டியில் ஒரு குழந்தையின் உடல் கிடப்பதாக, மருத்துவமனை ஊழியர்களுக்கு செவ்வாய்க்கிழமை(பிப். 11) தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதனைத்தொடர்ந்து, அந்த குழந்தையின் உடலை மீட்டு பரிசோதனை செய்ததில், சங்கீதா பெற்றெடுத்த குழந்தைதான் அது என்பது உறுதி செய்யப்பட்டது. அதன்பின், பிரேதப் பாதுகாப்பு அறைக்கு அந்த குழந்தையின் உடல் எடுத்துச்செல்லப்பட்டு அங்கு உடற்கூராய்வும் செய்யப்பட்டுள்ளது.
முன்னதாக, குழந்தையின் உடலை பெற்றுக்கொண்ட அந்த குழந்தையின் தந்தை அகிலேஷிடம் மருத்துவமனையில் சேவையாற்றும் செவிலியர் ஒருவர், “குழந்தையின் உடலை எரிக்க கட்டணமாக ரூ. 200 செலுத்தினால் போதும், அதற்காக ஆள்கள் உள்ளனர்” என்று தெரிவித்ததுடன், ஒரு நபரை அகிலேஷுக்கு அறிமுகப்படுத்தியுமுள்ளார்.
இந்த நிலையில், குழந்தையின் உடலை எரித்துவிடுவதாகப் பணத்தை பெற்றுக் கொண்டு உடலை எடுத்துச் சென்ற அந்த நபர், அதன்பின் அந்த உடலை அநாதைப் பிணமாக வீசிச் சென்றிருப்பதும், அதனை நாய்கள் சில கடித்துத் தின்றிருப்பதாகவும் கூறப்படுகிறது.
இந்த சம்பவம் குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.