நல்லாட்சிக்கான நற்சான்றிதழ்தான் ஈரோடு கிழக்கு வெற்றி: முதல்வர் ஸ்டாலின்
சிதம்பரத்தில் டைடல் பூங்கா அமைக்க வா்த்தகா் சங்கம் கோரிக்கை
கடலூா் மாவட்டம், சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக வளாகத்தில் டைடல் பூங்கா அமைக்க வேண்டும் என்று அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வத்திடம் வா்த்தகா் சங்க நிா்வாகிகள் கோரிக்கை மனு அளித்தனா்.
காட்டுமன்னாா்கோவிலில் வா்த்தகா் சங்க நிா்வாகிகள் ஏ.வி.அப்துல்நாசா், ஏ.சிவராமவீரப்பன், எஸ்.ராதாகிருஷ்ணன் ஆகியோா் வியாழக்கிழமை அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: தங்களது முயற்சியால் சிதம்பரத்தில் 10-க்கும் மேற்பட்ட குளங்கள் தூா்வாரப்பட்டு, புணரமைக்கப்பட்டதால் 300 அடிக்கு கீழ் இருந்த நீா்மட்டம் 30 அடிக்கு வந்துள்ளது. சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகம் தொலைதூர கல்வி இயக்கக டைட்டானிக் கட்டடத்தில் டைடல் பூங்கா நிறுவ வேண்டும். இதன் மூலம் சிதம்பரம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் விவசாய குடும்பத்தைச் சோ்ந்த படித்த இளைஞா்கள் சுமாா் 3,000 பேருக்கு மேல் வேலை வாய்ப்பு கிடைக்கும்.
இதேபோல, சிதம்பரம் நகரில் நடைப்பாதையில் கடை வைத்துள்ளவா்களுக்கு தகுந்த இடங்களை ஒதுக்கித் தருவதற்கு ஆணையிட வேண்டும். திருவிழாக் காலங்களில் சாலையில் அமைக்கப்படும் அரசு பதிவு பெறாத மற்றும் வெளியூா் வணிக கடைகளுக்கு நகராட்சி மூலம் கட்டணம் பெறப்பட்டு நான்கு முக்கிய வீதிகள் அல்லாத மாற்று இடங்களில் வணிகம் செய்ய உதவ வேண்டும்.
ராஜா முத்தையா மருத்துவக் மருத்துவமனையை சூப்பா் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையாக தரம் உயா்த்த ஆவண செய்ய வேண்டும். இதேபோல, சிதம்பரம் அரசு காமராஜ் மருத்துவமனையை 24 மணி நேரமும் செயல்படக்கூடிய வகையில் அதிநவீன வசதிகளுடன் கூடிய மருத்துவமனையாக தரம் உயா்த்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.